கிணத்துக்கடவில் சர்வீஸ் சாலையோரத்தில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம்-உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கிணத்துக்கடவில் சர்வீஸ் சாலையோரத்தில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டு உள்ளது. அதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளார்கள்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவில் சர்வீஸ் சாலையோரத்தில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டு உள்ளது. அதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளார்கள்.
தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்
கோவை-பொள்ளாச்சி இடையே உள்ள சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டபோது கிணத்துக்கடவு ஊருக்குள் மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த மேம்பாலம் கிணத்துக்கடவு அருகே உள்ள சாலைப்புதூரிலிருந்து அரசம்பாளையம் பிரிவு வரை சுமார் 2.5 கிலோமீட்டர் தூரம் வரை உள்ளது. மேம்பாலத்தின் கீழ் பகுதியில் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு கடந்து செல்ல கிணத்துக்கடவு பஸ் நிலையம், கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி, சிவலோகநாதர் கோவில், கிணத்துக்கடவு பழைய பஸ் நிறுத்தம், கிணத்துக்கடவு பழைய சோதனை சாவடி ஆகிய இடங்களில் இடைவெளிகள் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சர்வீஸ் சாலையை கார், இருசக்கர வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தும் பார்க்கிங்காக மாற்றி வருகின்றனர். சில இருசக்கர வாகன ஓட்டிகள் கோவை பொள்ளாச்சி செல்ல வேண்டுமென்றால் வாகனங்களை சர்வீஸ் சாலையோரத்தில் தாறுமாறாக நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் அந்த சாலையில் அடிக்கடி வாகன விபத்துகள் நிகழும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
போக்குவரத்து நெரிசல்
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- மேம்பாலம் அமைத்துவிட்டு அந்த சாலையை கண்காணிக்கும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபடுவது வழக்கம். தற்போது தேசிய நெடுஞ்சாலை துறையினர் கிணத்துக்கடவு ஊருக்குள் உள்ள சர்வீஸ் சாலையை கண்டுகொள்ளாததால் சர்வீஸ் சாலையோரங்களில் இருசக்கர வாகனங்களின் நிறுத்தமாகவும், கிணத்துக்கடவு சார்பதிவாளர் அலுவலகம் அருகில் கார் நிறுத்தம் பகுதியாகவும் மாறி வருகிறது. சர்வீஸ் சாலையின் ஓரங்களில் ஆங்காங்கே சாலையை மறைத்து மணல்களும் ஆக்கிரமித்துள்ளன. இதனால் சர்வீஸ் சாலையில் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. தொடக்கத்தில் இந்த சாலை அமைக்கும் போது நெடுஞ்சாலை துறையினர் அடிக்கடி பார்வையிட்டு மேம்பாலத்தின் கீழ்பகுதியில் வாகனங்களை நிறுத்துபவர்களையும் நடைபாதைகளை ஆக்கிரமித்த நபர்களையும் எச்சரிக்கை விடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி வந்தனர். தற்போது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு இல்லாததால் மேம்பாலத்தின் கீழ் பகுதி போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக மாறி இடையூறாக சர்வீஸ் சாலையாக மாறியுள்ளது. அதனால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.






