நாச்சியார்கோவிலில்குத்துவிளக்கு தயாரிப்பு குறையும் அபாயம்


நாச்சியார்கோவிலில்குத்துவிளக்கு தயாரிப்பு குறையும் அபாயம்
x

மூலப்பொருட்களின் விலை உயர்வால் நாச்சியார்கோவிலில் குத்துவிளக்கு தயாரிப்பு பாதிக்கப்படும் அபாயமும், விற்பனை சரிய வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

தஞ்சாவூர்

திருவிடைமருதூர்:

மூலப்பொருட்களின் விலை உயர்வால் நாச்சியார்கோவிலில் குத்துவிளக்கு தயாரிப்பு பாதிக்கப்படும் அபாயமும், விற்பனை சரிய வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

நாச்சியார்கோவில் குத்துவிளக்கு

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த நாச்சியார்கோவிலில் தயாராகும் குத்துவிளக்குகள்பிரசித்தி பெற்றவையாகும். இங்கு தயாரிக்கப்படும் குத்துவிளக்குகள் அனைத்தும் வார்ப்பு முறையில் ஆகம விதிப்படி செய்யப்படுகின்றன.

இந்த விளக்குகளை செய்யும் கலைஞர்களின் நகாசு வேலைப்பாடுகள் மிகவும் நுணுக்கமானவை. இதன் செய்முறை மற்ற இடங்களில் செய்யப்படும் தயாரிப்புகள் போல் இருக்காது. காவிரி ஆற்றின் வண்டல் மணலும், களிமண்ணும் இவர்களின் வார்ப்பு தொழிலுக்கு உதவியாக இருக்கிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த குத்துவிளக்குகளை தயாரிக்க நாச்சியார்கோவிலில் உள்ள கம்மாளத்தெரு, மேலத்தெரு, அய்யம்பாளையத்தெரு, சமத்தனார்குடி உள்ளிட்ட பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட பட்டறைகள் உள்ளன. இந்த தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் 3 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.

கலைநுணுக்கம்

இங்கு 1 அடி முதல் 7 அடி வரை பல்வேறு வடிவங்களில் பித்தளையால் ஆன குத்துவிளக்குகள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு தயாரிக்கப்படும் 6 அடி உயர குத்துவிளக்குகள் அரசு மற்றும் தனியார் விழாக்களில் பெரும்பாலும் இடம் பெற்றிருக்கும். நாச்சியார்கோவிலில் தயாரிக்கப்படும் குத்துவிளக்குகள் தரமானது மட்டுமல்லாமல் கலை நுணுக்கமும், வேலைப்பாடுகளும் நிறைந்தது.

இதனால் தமிழகத்தில் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகம், மராட்டியம் போன்ற வெளிமாநிலங்களிலும் நாச்சியார்கோவில் குத்துவிளக்குகளின் விற்பனை அதிகம். மேலும் சிங்கப்பூர், மலேசியா, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

புவிசார் குறியீடு

சுபமுகூர்த்த நாட்கள் அதிகம் நிறைந்த வைகாசி, ஆவணி, தை மாதங்களில் குத்துவிளக்குகள் விற்பனை அதிக அளவில் இருக்கும். இதையொட்டி ஆண்டு முழுவதும் நாச்சியார்கோவிலில் குத்துவிளக்குகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. நாச்சியார்கோவில் பித்தளை குத்துவிளக்குகளுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.

குத்துவிளக்குகள் செய்யும்போது மிகவும் முக்கியமானது அதன் வடிவமைப்பு. அந்த வடிவமைப்பு முடிவானவுடன் அச்சுகளை முதலில் செய்கின்றனர். அடிப்பாகம், நடுப்பாகம், மேல்பாகம் மற்றும் அன்னப்பட்சி வடிவம் என அச்சு செய்தவுடன் முதலில் கருமண்ணை சிறிய மரப்பெட்டியில் சமதளமாக்கி, அதில் அந்த அச்சை வைத்து அழுத்தி எடுக்கின்றனர். அச்சு நன்றாக மண்ணில் பதிந்தவுடன் அதை வெளியே எடுத்து அதேபோல் அடுத்த பாகம் செய்கின்றனர்.

மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு

பின்னர் இரண்டு பாகங்களையும் சேர்த்து வைத்து கொள்கின்றனர். இதையடுத்து பித்தளை கட்டிகளை(பார்) எடுத்து உருக்குகின்றனர். இந்த பித்தளை கட்டிகளை உருக்க 5 மணி நேரம் ஆகிறது. அதுவரை இடைவிடாது அடுப்பில் தீ எரிந்து கொண்டே இருக்கிறது. பித்தளை கட்டிகள் நன்கு உருகியவுடன் அந்த திரவகத்தை எடுத்து அச்சுகளில் ஊற்றி சிறிது நேரத்தில் வெளியே எடுத்து விடுகின்றனர்.

பின்னர் அவற்றை மெருகு ஏற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். அதைத்தொடர்ந்து பாலீஷ் போட்டு விளக்குகளை பளபளப்பு ஆக்குகின்றனர். இந்த பணி முடிந்தவுடன் குத்துவிளக்கின் அடிப்பகுதியில் வர்ணம் பூசி அடையாளம்(குறியீடு) செய்கின்றனர். இப்படி கலைநயத்துடன் செய்யப்படும் குத்துவிளக்குகளுக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை அதிகரித்துக்கொண்டே இருப்பதால் குத்துவிளக்குகளின் விலையும் அதிகரித்து விற்பனை பாதிக்கப்படுகிறது.

விலையை குறைக்க வேண்டும்

இது குறித்து குத்துவிளக்குகள் உற்பத்தியாளர் சங்க துணைச் செயலாளர் வெங்கடேஷ் கூறும்போது, ஒரு நாளைக்கு 40 முதல் 50 குத்துவிளக்குகள் தயார் செய்ய முடியும். மூலப்பொருட்களின் விலை உயர்வால் தயாரிக்கும் பணி பாதிக்கப்படுகிறது. மூலப்பொருட்களின் விலை குறைந்தால் குத்துவிளக்கு தயாரிக்கும் பணி நலிவடையாமல் பாதுகாக்க முடியும் என்றார்.

பித்தளை பாத்திர வியாபாரிகள் சங்க தலைவர் பாஸ்கரன் கூறும்போது, மூலப்பொருட்களுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது. 2021-ம் ஆண்டு உருக்கு பித்தளை ஒரு கிலோ ரூ.300 ஆக இருந்தது. ஆனால் தற்போது ரூ.500 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வாலும் மூலப்பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. அதுவும் தங்கத்தை போல் மூலப்பொருட்களின் விலையும் தினமும் மாறுகிறது. இதனால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம். எனவே மூலப்பொருட்களின் விலை நிரந்தரமாக இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தயாரிக்கும் பணி பாதிக்கப்படுவதுடன் விற்பனையும் சரிய வாய்ப்பு உள்ளது என்றார்.


Next Story