சாலையில் ஓடும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்
சாலையில் ஓடும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவில் தினசரி காய்கறி சந்தை முதல் அண்ணா நகர் வரை செல்லும் சர்வீஸ் சாலையில் வேகத்தடை அருகே கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் மழை நேரங்களில் மழை நீரும், மற்ற நேரங்களில் பெரியார் நகர் பகுதியில் இருந்து வரும் கழிவுநீரும் செல்லும். சர்வீஸ் சாலை அமைக்கும்போது கழிவுநீர் கால்வாய் கட்டுவதற்கு இடம் இல்லாததால், ஏற்கனவே இருந்த கழிவுநீர் கால்வாயை அகற்றாமல் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டது. தற்போது அந்த கால்வாயில் அதிகளவில் புதர் செடிகள் வளர்ந்து, குப்பைகள் தேங்கி அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் கழிவுநீர் வெளியேறி சாலையில் ஓடுகிறது. இதனால் அண்ணாநகர், செம்மொழிகதிர் நகர், பகவதி பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சர்வீஸ் சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாயில் புதர் செடிகளை வெட்டி அகற்றி அடைப்புகளை நீக்க வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.