நங்காஞ்சி ஆற்றில் வளர்ந்துள்ள செடி-கொடிகளால் நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம்
அரவக்குறிச்சி நங்காஞ்சி ஆற்றில் வளர்ந்துள்ள செடி-கொடிகளால் நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அதனை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படுமா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
புதர்மண்டி காட்சியளிக்கும் ஆறு
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே கணக்குப்பிள்ளைபுதூரில் நங்காஞ்சி ஆறு உள்ளது. மேலும் இப்பகுதியில் அதிகம் மழை பெய்யும் ஆற்றில் தண்ணீரை சேமித்து வைத்து அப்பகுதியில் உள்ள விவசாயிகள் அதிகம் பயன்படுத்தி வந்தனர். மேலும் பொதுமக்களுக்கும் இந்த தண்ணீர் மிகவும் உதவியாக இருக்கும். மேலும் கால்நடைகள் அதிகம் தண்ணீர் பருகி வந்துள்ளனர்.
இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக ஆறு முழுவதும் செடி, கொடிகள் முளைத்து முட்புதர்கள்போல் காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோரிக்கை
இதேபோல் கணக்குப்பிள்ளை புதூர் செல்லும் வழியில் இடையே உள்ள நங்காஞ்சியாற்று தரைமட்ட பாலத்தின் இரு புறங்களிலும் செடி-கொடிகள் வளர்ந்து முட்புதர்கள் மண்டி காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் நங்காஞ்சி ஆற்றில் தண்ணீர் வெளியேற முடியாமல் தேங்கி நிற்கின்றது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தடுப்பணையை தூர்வாரி தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவிழாவுக்கு முன்பு நடவடிக்கை தேவை
இதுகுறித்து அரவக்குறிச்சியை சேர்ந்த பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன்விவரம் பின்வருமாறு:-
தங்கவேல்:- அரவக்குறிச்சியில் உள்ள மாரியம்மன் ேகாவில் திருவிழா இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ளது. அப்போது நங்காஞ்சி ஆற்றில் ஊற்று தோண்டி எடுக்கப்பட்டு அதில் இருந்து தீர்த்தம் எடுத்து செல்லப்படுவது வழக்கம். மேலும் சாமியை ஆற்றுக்கு அழைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சியும் இந்த நங்காஞ்சி ஆற்றில் தான் நடைபெறும். தற்போது தடுப்பணையில் அதிகம் புதர்மண்டி காட்சியளிப்பதால் தண்ணீர் எடுப்பதில் கடுமையான சிரமம் ஏற்படும். மேலும் திருவிழா காலங்களில் இந்த ஆற்றை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் எனவே திருவிழாவிற்கு முன்பே ஆற்றை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பல் டாக்டர் சந்தோஷ்:- நஞ்ங்காஞ்சி ஆற்றின் மூலம் விவசாயிகள் பலர் பயன் அடைந்து வந்தனர். தற்போது ஆற்றில் செடிகள், கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. இதனால் ஆற்றில் இருந்து வெளியேறும் தண்ணீர் ஆங்காங்கே தேங்கி நின்று துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அந்த பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாக நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆற்றின் அருகே உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வர். ஆனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி வருவதால் பக்தர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். .
சாக்கடைபோல காட்சியளிக்கிறது
ராஜா:- நங்காஞ்சி ஆற்றில் இருந்து தண்ணீரை எடுத்து இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தி வந்தனர். மேலும் கால்நடைகள் வெயில் காலங்களில் தண்ணீரை அதிகம் பருகி வந்தது. தற்போது முட்புதர் மண்டி காட்சியளிப்பதால் ஆற்றில் இருந்து வெளியேறும் தண்ணீர் சாக்கடை போல காட்சியளிக்கிறது. இதனால் அதனை யாரும் பயன்படுத்த முடியாமல் உள்ளது. இப்படியே சென்றால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து மிகவும் பாதிக்கப்படும்.
தூர்வார வேண்டும்
ரகுபதி:- அரவக்குறிச்சி நங்காஞ்சி ஆற்றில் எப்போதும் அதிகளவில் செடி,கொடிகள் வளர்ந்து முட்புதர்போல காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதியில் தண்ணீர் தேங்கி இப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் மூக்கை பிடித்து கொண்டு செல்கின்றனர். மேலும் தேங்கி நிற்கும் தண்ணீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி பலரை கடித்து வருகிறது. இதனால் அவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டு வருகிறது. தற்போது வெயில் காலம் என்பதால் தண்ணீர் அதிகம் தேவைப்படும் என உடனடியாக ஆற்றை தூர்வாரி தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.