வழிந்தோடும் கழிவுநீரால் தொற்று நோய்பரவும் அபாயம்


வழிந்தோடும் கழிவுநீரால் தொற்று நோய்பரவும் அபாயம்
x

வழிந்தோடும் கழிவுநீரால் தொற்று நோய்பரவும் அபாயம்

தஞ்சாவூர்

கும்பகோணம் காந்தி பூங்காவில் வழிந்தோடும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காந்தி பூங்கா

கும்பகோணத்தில் டவுன் ஹால் ரோடு பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான வீடுகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளன. அதனை சுற்றி அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்களின் வசதிக்காக மாநகராட்சி சார்பில் பொழுதுபோக்கிற்காக ஊஞ்சல், சீசா, கற்கள் பதிக்கப்பட்ட நடைபாதை, மின்விளக்கு வசதி, இரும்பு இருக்கைகள், சறுக்குகள், பாடல்கள் ஒலிக்க ஒலிபெருக்கிகள் ஆகிய வசதிகளுடன் சில ஆண்டுகளுக்கு முன்பு காந்தி பூங்கா அமைக்கப்பட்டது.

இந்த பூங்காவில் பொதுமக்களின் வசதிக்காக 2 கழிவறைகள், தண்ணீர் தொட்டி மற்றும் குப்பைகளை சேகரிக்கும் இடத்திலேயே உரமாக்கும் பகுதியும் செயல்பட்டு வருகிறது.

இந்த பூங்காவிற்கு தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் வந்து செல்வது வழக்கம். அங்குள்ள உபகரணங்களில் குழந்தைகள் விளையாடி மகிழ்வார்கள். பெரியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்வது, அமைதியான சூழலில் குழந்தைகள் விளையாடுவதை கண்டு ரசிப்பது என பொழுதை கழிப்பார்கள்.

கழிவுநீர் சூழ்ந்துள்ளது

பூங்காவில் ஊஞ்சல், பொம்மைகள் ஆகியவை சேதமடைந்துள்ளது. அதில் பாடல்கள் ஒலிக்க வைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கிகள் சேதமடைந்துள்ளது. சில மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. பூங்காவில் உள்ள கழிவறை அருகிலேயே கழிவுநீர் சேகரிப்பு தொட்டி கட்டப்பட்டுள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாக கழிவுநீர் செல்ல வழியில்லாததால் நாளடைவில் பூங்காவின் அருகே உள்ள செடிகளுக்குள் செல்கிறது. அவை வெளியே செல்ல வழியில்லாததால் அவற்றின் நிறம் மாறி தற்போது கடும் துர்நாற்றம் வீசத்தொடங்கியுள்ளது. இவ்வாறு பூங்காவில் கழிவுநீர் சூழ்ந்துள்ளதால் பூங்காவிற்கு வரும் பொதுமக்கள், குழந்தைகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தொற்றுநோய் பரவும் அபாயம்

இந்த கழிவுநீர் அப்பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியையும் சூழ்ந்துள்ளது. இதனால் அந்த தண்ணீரிலும் கழிவுநீர் கலந்து பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பூங்காவில் சேதமடைந்த விளையாட்டு உபகரணங்களை சரி செய்து முறையாக பராமரிக்க வேண்டும். பூங்காவில் வழிந்தோடும் கழிவுநீரை முறையாக சரிசெய்து கழிவுநீர் தொட்டி அல்லது பாதாள சாக்கடைக்குள் செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story