சோதனை இன்றி நுழையும் வாகனங்களால் நோய் தொற்று பரவும் அபாயம்


சோதனை இன்றி நுழையும் வாகனங்களால் நோய் தொற்று பரவும் அபாயம்
x
தினத்தந்தி 30 Oct 2022 12:15 AM IST (Updated: 30 Oct 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

தமிழக-கேரள எல்லை வழியாக சோதனை இன்றி நுழையும் வாகனங்களால் நோய் தொற்று பரவும் அபாயம் நிலவுகிறது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

தமிழக-கேரள எல்லை வழியாக சோதனை இன்றி நுழையும் வாகனங்களால் நோய் தொற்று பரவும் அபாயம் நிலவுகிறது.

பறவை காய்ச்சல்

கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியில் உள்ள பண்ணைகளில் பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பண்ணையில் வளர்க்கப்படும் வாத்து, கோழிகளை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தமிழகத்திற்குள் பறவை காய்ச்சல் பரவாமல் இருக்க தமிழக-கேரள எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ஆனால் பொள்ளாச்சி அருகே உள்ள கோபாலபுரம் சோதனை சாவடியில் கால்நடை பராமரிப்பு துறை மூலம் எந்த தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. மேலும் வாகனங்களுக்கு கிருமி நாசினி மருந்து தெளிக்கப்படாதது மட்டுமின்றி கண்காணிப்பு பணியில் ஈடுபட டாக்டர்கள், ஊழியர்கள் இல்லாததால் அதிருப்தி ஏற்பட்டு உள்ளது. ஒரு டேபிள் மட்டும் போடப்பட்டு ஆட்கள் இல்லாமல் சோதனை சாவடி வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் தமிழகத்திற்குள் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

கண்காணிப்பு இல்லை

கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு உள்ளது. இதன் காரணமாக தமிழகத்திற்குள் பறவை காய்ச்சல் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கால்நடை பராமரிப்பு துறை உத்தரவிட்டு உள்ளது. ஆனால் பொள்ளாச்சி அருகே கோபாலபுரம் சோதனை சாவடியில் கண்காணிப்பு இல்லை. இன்று (நேற்று) காலை கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் வந்து வாகனங்களுக்கு கிருமி நாசினி மருந்து தெளிப்பது போன்று புகைப்படம் எடுத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. அதன்பிறகு சோதனை சாவடியில் மருந்து தெளித்தல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கவில்லை. இதனால் கறிக்கோழி மற்றும் முட்டை ஏற்றி வரும் வாகனங்கள் எந்தவித தடையின்றி செல்கின்றன. தடுப்பு நடவடிக்கைகள் இல்லாததால் கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் பறவை காய்ச்சல் பரவும் அச்சம் ஏற்பட்டு உள்ளது. எனவே பொள்ளாச்சி பகுதியில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும். கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி மருந்து தெளித்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

24 மணி நேரமும்...

இதற்கிடையில் சோதனை சாவடி அருகே ஊசி, மருந்து பாட்டில்கள் கிடந்தன. அந்த வழியாக செல்லும் பாதசாரிகளை ஊசி பதம்பார்த்தால் தொற்று பரவ கூடும். எனவே அதிகாரிகள் பயன்படுத்திய ஊசி உள்ளிட்ட மருத்துவ கழிவுகளை சாலையில் வீசுவதை தடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.இதுகுறித்து கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பை தொடர்ந்து தமிழக-கேரள எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் வாகனங்களுக்கு மருந்து தெளித்தல் உள்ளிட்ட தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோபாலபுரம் சோதனை சாவடியில் கண்காணிப்பு இல்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்து 24 மணி நேரமும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்றனர்.


Next Story