மருத்துவக்கழிவுகளால் தொற்று நோய் பரவும் அபாயம்
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து திருச்சி-சென்னை பைபாஸ் செல்லும் இருவழிச்சாலையில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகளால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மருத்துவ கழிவுகள்
பெரம்பலூர் மாவட்டம் கோனேரிபாளையம், எளம்பலூர், ஆலம்பாடி, செஞ்சேரி, சொக்கநாதபுரம் ஆகிய கிராமப்புறங்களில் உள்ள வீடுகள், கட்டிடங்கள், இறைச்சி கடைகள், ஓட்டல்களில் சேகரிக்கப்படும் கழிவுகள் பெரம்பலூர்-சென்னை பைபாஸ் சாலையில் இந்திரா நகரில் இருந்து துறையூர், ஆத்தூர் மார்க்கத்தில் செல்லும் புறவழிச்சாலையில் கொட்டப்படுகின்றன. மேலும் இறந்தவர்கள் பயன்படுத்திய கட்டில், மெத்தை, தலையணை, போர்வை உள்ளிட்டவற்றை ஆங்காங்கே சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினர் கொட்டிவிட்டு சென்றுவிடுகின்றனர். இதனை தெருநாய்கள், பன்றிகள் கிளறிவிடுவதால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.
இதேபோல் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து திருச்சி-சென்னை பைபாஸ் செல்லும் இருவழிச்சாலையில் மருத்துவக்கழிவுகளை மர்ம ஆசாமிகள் இரவு நேரங்களில் கொட்டிவிட்டு சென்று விடுகிறார்கள். எனவே இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
கடும் துர்நாற்றம்
பெரம்பலூர் சாக்ரடீஸ் தெருவைச்சேர்ந்த ராஜா:- பெரம்பலூரில் கலெக்டர் அலுவலக சாலையில், திருச்சி-சென்னை பைபாஸ் சாலை துறைமங்கலம் ஏரிக்கரை வரை செல்லும் இருவழிச்சாலையில், தனியார் மருத்துவமனைகளில் சேகரமாகும் குப்பைகள், மருத்துவக்கழிவுகள் தினமும் இரவு நேரங்களில் கொட்டப்பட்டு வருகின்றன. குறிப்பாக அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தப்பட்ட மருத்துவக்கழிவுகள், மருந்துப்பொருட்கள், உடைக்கப்பட்ட அட்டைபெட்டிகள் உள்ளிட்ட கழிவுப்பொருட்களை சம்மந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்தினர் கலெக்டர் அலுவலகச்சாலையில் கொட்டி செல்கின்றனர்.
இந்த கழிவுகளில் உணவு ஏதேனும் உள்ளதா? என்று தெருநாய்கள், பன்றிகள் கிளறிவிடுவதால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் ஏற்பட்டு நடைப்பயிற்சி செல்பவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை தடுக்க மாவட்ட கலெக்டரும், நகராட்சி நிர்வாகமும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு ஏற்கனவே கொட்டியுள்ள மருத்துவக்கழிவுகளை உடனே அகற்றவேண்டும்.
அபராதம் விதிக்க வேண்டும்
ஆரோக்கியசாமி நகரை சேர்ந்த பாலாஜி:- தனியார் மருத்துவமனைகளில் சேகரமாகும் குப்பைகளை அகற்றுவதற்கு பொதுசுகாதாரத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் மூலம் குறிப்பிட்ட சில விதிமுறைகள் உள்ளன. ஆனால் அந்த விதிமுறைகளை சில தனியார் மருத்துவமனைகள் பின்பற்றுவதில்லை. அவர்களது குப்பைகளை பிரதான சாலைகளில் கொட்டி நோய்பரப்பும் காரணியாக மாற்றி வருகின்றனர். இப்பகுதியில் சாலையில் நடந்து செல்வோரும், இருசக்கர வாகனங்களில் செல்வோரும் துர்நாற்றத்தினால் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே மருத்துவக்கழிவுகளை சாலையில் கொட்டிவரும் மருத்துவமனை நிர்வாகங்கள் மீது அபராதம் விதித்து இனிகொட்டாமல் எச்சரித்து தடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.