ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பில் பழனி சண்முகநதி
புண்ணிய நதியான சண்முகநதியை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
புண்ணிய நதியான சண்முகநதியை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
புண்ணிய நதி
முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் பழனியில் உள்ள இடும்பன்குளம், சண்முகநதியில் புனித நீராடிய பின்னரே பழனி கோவிலுக்கு வந்து தரிசனம் செய்கின்றனர்.
இதேபோல் பன்னீர்காவடி, பால்காவடி, தீர்த்தகாவடி, பறவைக்காவடி எடுத்து வரும் பக்தர்களும் சண்முகநதியில் நீராடிய பிறகு தான் பழனி முருகன் கோவிலுக்கு செல்கின்றனர். இதுதவிர தை, ஆடி அமாவாசை உள்ளிட்ட விசேஷ நாட்களில் ஏராளமான மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு சண்முகநதியில் வைத்தே தர்ப்பணம் கொடுக்கின்றனர். இதனால் சண்முகநதி, பழனி பகுதியின் புண்ணிய நதியாகவும் விளங்குகிறது. மேலும் பழனி சுற்று வட்டார கிராம பகுதிக்கு குடிநீர், பாசன ஆதாரமாகவும் சண்முகநதி திகழ்கிறது.
ஆகாயத்தாமரை
பல்வேறு சிறப்புகளுக்கு சொந்தமான சண்முகநதி மாசடைந்து வருவது என்பது பக்தர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. சண்முகநதி மாசடைவதற்கு கண்காணிப்பு இல்லாததே முக்கிய காரணம் ஆகும்.
இது ஒருபுறம் இருக்க, பக்தர்கள் புனித நீராடிய பின்பு தாங்கள் அணிந்த ஆடைகளை ஆற்றில் அப்படியே விட்டு விடுவதால் குப்பைபோல் தேங்கி காட்சியளிக்கிறது. அதோடு நீரில் ஆடைகள் தேங்குவதால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது.
இதன் தொடர்ச்சி நதி மாசடைவதுடன் பாசிகள், ஆகாயத்தாமரை போன்றவை வளர வழிவகுக்கிறது. இதனால் நதியின் அழகு, பறிபோவதுடன், அதன் அழகிய நீரோட்ட பாதையே தெரியாத அளவுக்கு பாசி படர்ந்து காட்சி அளிக்கிறது. எனவே பழனி பகுதியின் புண்ணிய நதியான சண்முகநதியில் படித்துறை, அமைத்தல், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கண்காணிப்பு
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பழனி கோவில் திருவிழாக்களின் போது சுவாமி தீர்த்தவாரி நிகழ்ச்சி சண்முகநதியில் நடைபெறுகிறது. எனவே பழனி சண்முகநதி மாசடைவதை தடுக்க அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். அசுத்தம் செய்வதை தடுக்க கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும் என்றனர்.