ஆபத்தான நிலையில் ஆற்றுப்பாலம்


ஆபத்தான நிலையில் ஆற்றுப்பாலம்
x

கீழ்வேளூர் ஒன்றியம் அகரகடம்பனூர் ஊராட்சி, கோவில் கடம்பனூர் சமத்துவ மயானம் செல்லும் சாலையில், ஆபத்தான நிலையில் உள்ள ஆற்றுப்பாலம் சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

நாகப்பட்டினம்

சிக்கல்:

கீழ்வேளூர் ஒன்றியம் அகரகடம்பனூர் ஊராட்சி, கோவில் கடம்பனூர் சமத்துவ மயானம் செல்லும் சாலையில், ஆபத்தான நிலையில் உள்ள ஆற்றுப்பாலம் சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

சேதமடைந்த ஆற்றுப்பாலம்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் அகரகடம்பனூர் ஊராட்சியில், கோவில் கடம்பனூர் ஆற்றாங்கரை தெருவில் சமத்துவ மயானம் உள்ளது. இந்த மயானத்திற்கு செல்லும் சாலையில் உள்ள ஆற்றங்கரை பாலம் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அகரகடம்பனூர் ஊராட்சியில் 2500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

அகரகடம்பனூர், கோவில் கடம்பனூர், ஸ்ரீகண்டிநத்தம், வடக்குத்தெரு, வெட்டி வாழ்க்கை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், தங்கள் பகுதிகளில் இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்வதற்கு கோவில் கடம்பனூர் ஆற்றங்கரை தெருவில் உள்ள ஆற்றுப்பாலத்தை கடந்து தான் சமத்துவ மயானத்திற்கு செல்ல வேண்டும்.

சீரமைக்க கோரிக்கை

கடந்த சில ஆண்டுகளாக அந்த பாலத்தின் இருபுறங்களிலும் இருந்த கைப்பிடி சுவர்கள் சேதமடைந்து இடிந்து விழுந்துவிட்டது. மேலும் பாலத்தின் அடியில் உள்ள சிமெண்டு சிலாப்புகள் சேதமடைந்து, எந்த நேரத்திலும் இடிந்து கீழேவிழும் அபாய நிலையில் உள்ளது. இந்த பாலம் இடிந்து விழுந்தால், மேற்கண்ட பகுதியில் வசிக்கும் மக்கள் அந்த மயானத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படும்.

இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள்,ஆபத்தான நிலையில் உள்ள ஆற்றங்கரை பாலத்தை சீரமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story