ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பணி


ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பணி
x

உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருப்பூர்

உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தேசிய மின்னணு வேளாண் சந்தை

திண்டுக்கல்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 10 ஆயிரம் மெட்ரிக் டன் விளைபொருட்களை இருப்பு வைக்கும் வகையில் 12 சேமிப்புக் கிடங்குகள் மற்றும் 25 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதனக் கிடங்கு செயல்பட்டு வருகிறது. இங்கு விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை இருப்பு வைத்து தேசிய மின்னணு வேளாண் சந்தை மூலம் விற்பனை செய்வதற்கான வசதி உள்ளது.

மேலும் இருப்பு வைக்கும் விளை பொருட்களுக்கு பொருளீட்டுக் கடனும் வழங்கப்படுகிறது. அத்துடன் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை உலர வைக்கவும், சுத்தம் செய்யவும் பயன்படும் வகையில் 4 உலர் களங்களும் இங்கு உள்ளது. ஆனால் மக்காச்சோளம் உள்ளிட்ட விளை பொருட்கள் அறுவடை சீசனில் இந்த உலர் களங்கள் போதுமானதாக இல்லை. இதனால் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் உள்ள சாலைகளில் விளைபொருட்களைக் காய வைக்க வேண்டிய நிலை உள்ளது.

கான்கிரீட் சாலை

இதே வளாகத்தில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையமும் செயல்பட்டு வருகிறது. சாலையில் காய வைக்கப்படுவதால் விவசாயிகளும், அதிகாரிகளும் இந்த சாலைகளைப் பயன்படுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. அத்துடன் சாலையில் காய வைக்கப்படும் விளைபொருட்களும் வாகனங்களால் சேதமடைகிறது. இதனைத் தடுக்கும் வகையில் கூடுதல் உலர் களங்கள் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அந்த கோரிக்கையை ஏற்று தற்போது இந்த வளாகத்தில் கூடுதலாக ஒரு உலர் களம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த உலர் களத்துக்கு செல்லும் வகையில் கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விவசாயிகள் எதிர்பார்ப்பு

எனவே வரும் மக்காச்சோள சீசனுக்கு விவசாயிகள் சிரமமில்லாமல் தங்கள் விளைபொருட்களை உலர வைப்பதற்கு வாய்ப்பு உண்டாகும். மேலும் காலியாக உள்ள இடத்தில் தரை மட்டத்தில் இருந்து அதிக உயரம் இல்லாமல் கான்கிரீட் தளங்கள் அமைத்துக் கொடுத்தால் விவசாயிகளுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். அத்துடன் அந்த பகுதிகள் புதர் மண்டி விஷ ஜந்துக்களின் குடியிருப்பாக மாறி விவசாயிகளை அச்சுறுத்துவது தவிர்க்கப்படும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Related Tags :
Next Story