பாடாய் படுத்தும் பல்லாங்குழி சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதி


பாடாய் படுத்தும் பல்லாங்குழி சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதி
x

மடத்துக்குளம் அருகே பாடாய் படுத்தும் பல்லாங்குழி சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

திருப்பூர்

மடத்துக்குளம் அருகே பாடாய் படுத்தும் பல்லாங்குழி சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

குண்டும் குழியுமான சாலை

உடுமலை-தாராபுரம் சாலையில் துங்காவியை அடுத்து சீலநாயக்கன்பட்டி வழித்தடத்தில் மெட்ராத்தி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை பணத்தம்பட்டி, தாசர்பட்டி, பூளவாடி உள்ளிட்ட பல கிராமங்களை இணைக்கும் இணைப்பு சாலையாக உள்ளது. இந்த தார்ச்சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்த நிலையில் முறையாக பராமரிக்கப்படாமல் குண்டும் குழியுமாக மாறியுள்ளது.

பல இடங்களில் சாலையில் மிகப்பெரிய குழிகள் ஏற்பட்டு மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் பல இடங்களில் சேறும் சகதியுமாக மாறி வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.

வாகன ஓட்டிகள் அவதி

இந்த சாலையில் பல நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து காயமடைந்து வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் இந்த சாலையை பயன்படுத்துவதற்கு அஞ்சும் நிலை உள்ளது. இந்த பகுதியில் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ள நிலையில், விவசாயிகள் இடுபொருட்களை வயலுக்கு கொண்டு செல்லவும், விளைபொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்லவும் சிரமப்படும் நிலை உள்ளது.

மேலும் மெட்ராத்தி உள்ளிட்ட பகுதிகளில் காற்றாலைகள் அதிக அளவில் இயங்கி வருகின்றன. அந்த காற்றாலைகள் பராமரிப்புக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் உதிரிபாகங்களை கொண்டு செல்வது சிக்கலாக உள்ளது.

அதிகாரிகள் அலட்சியம்

சேதமடைந்துள்ள சாலை குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

'பல கிராமங்களின் இணைப்பு சாலையாக விளங்கி வந்த இந்த சாலையை தினசரி ஏராளமானவர்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனால் பல ஆண்டுகளாக இதே அவல நிலையில் நீடிக்கும் இந்த சாலையை பராமரிப்பதில் அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றனர். பொருளாதார வளர்ச்சியில் போக்குவரத்து எவ்வளவு முக்கிய இடம் பிடிக்கிறது என்பதை உணர்ந்ததால் தான் நாடு முழுவதும் பல ஆயிரம் கோடி செலவில் சாலை வசதிகளை உருவாக்கி வருகிறார்கள். அந்தவகையில் மடத்துக்குளம் பகுதியிலும் பைபாஸ் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் பொருளாதார வளர்ச்சியில் கிராமங்கள் மற்றும் விவசாயத்தின் பங்கும் இருக்கிறது என்பதை அனைவரும் மறந்து விட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. மோசமான சாலைகள் என்பவை வளர்ச்சியை தடை செய்பவை என்பது மட்டுமல்லாமல் மோசமான நிர்வாகத்துக்கான எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது. எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க மடத்துக்குளம் ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்'என்று அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story