ஈரோடு வில்லரசம்பட்டியில் மின்கம்பங்களை அகற்றாமல் போடப்பட்ட தார்சாலை; விபத்து ஏற்படும் அபாயம்
ஈரோடு வில்லரசம்பட்டியில் மின்கம்பங்களை அகற்றாமல் போடப்பட்ட தார்சாலை; விபத்து ஏற்படும் அபாயம்
ஈரோடு வில்லரசம்பட்டி நால்ரோட்டில் இருந்து திண்டல் வரை சாலை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதற்காக இருபுறமும் சாலையோரமாக குழி தோண்டப்பட்டு கற்கள், மண் போட்டு சாலை பலப்படுத்தப்பட்டது. மேலும் புதியதாக சாலை அமைக்கும் பகுதியில் உள்ள மின்கம்பங்கள் அகற்றப்பட்டு சாலையோரமாக இடம் மாற்றி நடப்பட்டன.
இந்தநிலையில் விரிவுபடுத்தப்பட்ட பகுதியில் மட்டும் புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டது. ஆனால் 4 இடங்களில் மின்கம்பங்கள் அகற்றப்படாமலேயே அதை சுற்றி அப்படியே தார் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இது வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தசாலையில் இரவு நேரத்தில் தெரு விளக்குகள் இல்லாததால் இருள் சூழ்ந்து காணப்படும். எனவே வாகன ஓட்டிகள் இரவில் மின்கம்பம் இருப்பது தெரியாமலேயே மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே மின்கம்பங்களை அகற்றி சாலையோரமாக அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.