திருச்சி மாவட்டத்தில் அதிகரித்து வரும் சாலை விபத்துகள்


திருச்சி மாவட்டத்தில் அதிகரித்து வரும் சாலை விபத்துகள்
x

திருச்சி மாவட்டத்தில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளால் கடந்த ஓராண்டில் மட்டும் 700 பேர் வரை பலியாகி உள்ளனர். உயிரிழப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

திருச்சி

திருச்சி மாவட்டத்தில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளால் கடந்த ஓராண்டில் மட்டும் 700 பேர் வரை பலியாகி உள்ளனர். உயிரிழப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதிகரிக்கும் சாலை விபத்துகள்

நாட்டில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாகனங்களின் எண்ணிக்கை தான் உயருகிறது என்றால் விபத்துகளின் எண்ணிக்கையும் அதற்கு ஈடு கொடுத்து அதிகரிப்பது வேதனை அளிப்பதாக உள்ளது. நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கேற்ப நெடுஞ்சாலைகளின் பயன்பாட்டை கருத்தில் கொண்டு தரமாக சாலை போடப்படுகிறது. தரமான சாலைகளால் வாகன பயணம் நேரம் குறைகிறது.

அதேநேரம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் வாகனங்களும் வித, விதமான நவீன தொழில்நுட்பங்களை கொண்டு அதிக இழுதிறன் கொண்ட என்ஜின்களை பொருத்தி தயாரிக்கிறார்கள். வாகனங்கள் மின்னல் வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. இந்த இரண்டு வகையான முன்னேற்றமும் நாட்டின் வளர்ச்சிக்கு தேவை தான் என்றாலும் அதன் மூலம் ஏற்படுகிற விபத்துகளை நினைக்கும்போது, கவலை அளிக்கக்கூடியதாக பார்க்கப்படுகிறது.

மையப்பகுதியான திருச்சி

வாகன விபத்துகள் அதிகரிப்புக்கு முறையாக சாலை விதிகளை பின்பற்றாததே முதன்மையான காரணமாக பார்க்கப்படுகிறது. நோய்த்தொற்று, இயற்கை பேரிடர் ஆகியவற்றால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்கமுடியாது. ஆனால் மனிதனின் கவனக்குறைவால் ஏற்படும் சாலை விபத்து மரணங்களை தவிர்க்க முடியாவிட்டாலும் நிச்சயமாக குறைக்க முடியும். தமிழகத்தில் சாலை விபத்துகள் அதிகமாக நடைபெறும் மாவட்டங்களின் பட்டியலில் திருச்சி முதல் 5 இடங்களில் உள்ளது.

தமிழகத்தில் மையப்பகுதியில் உள்ள திருச்சி மாவட்டம் நான்குபுறங்களிலும் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய முக்கிய போக்குவரத்து வழித்தடமாக உள்ளது. திருச்சியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தினந்தோறும் விபத்துகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஒரு சில பகுதிகள் தொடர் விபத்து நடக்கும் பகுதிகளாகவும் உள்ளன. கவனக்குறைவாக கனரக வாகனங்களை சாலையோரம் நிறுத்திவிட்டு செல்வதாலும், பின்னால் வருகிற வாகனங்களுக்கு சமிஞ்ஞை காட்டாமல் வளைவுகளில் திரும்புவதாலும், போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காமல் வேகத்தில் வாகனங்களை இயக்குவதாலும் விபத்துகள் அரங்கேறுகிறது.

கொரோனாவுக்கு பிறகு...

இதேபோல் மாநகருக்குள்ளும் அதிவேகமாக வாகனம் ஓட்டுவதாலும், கவனக்குறைவாக சாலைகளை கடப்பதாலும் விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் வாகனங்கள் இயக்காததால் சாலை விபத்துகள் அதிகமாக நடைபெறவில்லை. ஆனால் தற்போது கொரோனா முடிவுக்கு வந்து இயல்புநிலை திரும்பி கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகிவிட்டதால் சாலை விபத்துகள் பன்மடங்கு அதிகமாகி வருவது பெரும் சவாலாக உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளை குறைக்கும் வகையில் சாலை பாதுகாப்பு வாரவிழா கடைபிடிக்கப்படுகிறது. தற்போது அது சாலை பாதுகாப்பு மாதமாக கணக்கிட்டு மாதம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரிகளிலும் சாலை விபத்துகள் குறித்தும் மாணவ-மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

எச்சரிக்கை பலகை

இது ஒருபுறம் இருக்க, தொடர்ச்சியாக விபத்து நடைபெறும் பகுதிகளை ஆய்வு செய்து, எச்சரிக்கை பலகை வைத்தல், வளைவுகளில் திரும்பும் இடங்களில் குறியீட்டு பலகை வைத்தல், பீக் அவர்ஸ் என்று சொல்லக்கூடிய காலை, மாலை நேரங்களில் அதிக போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் இடங்களில் கூடுதல் போலீசாரை பணியாற்ற நியமித்தல், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த வேகத்தடைகள் அமைத்தல், விபத்து அபாய பகுதியை காட்டுவதற்கு ஒளிரும் விளக்குகள் அமைத்தல் உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறான அனைத்து நடவடிக்கைளை மேற்கொண்டபோதும், விபத்துகள் தவிர்க்க முடியாததாக மாறி வருகிறது.

இது குறித்து பொதுமக்கள், போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:-

விபத்து பகுதியில் ஆய்வு

சாலை பயனீட்டாளர்கள் நலக்குழு ஒருங்கிணைப்பாளர் அய்யாரப்பன்:-

சமீபகாலமாக சாலை விபத்துகள் அதிகமாக நடைபெற்று வருகிறது. அதனை கட்டுப்படுத்த காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை இணைந்து விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்ய வேண்டும். அதன் பிறகு விபத்துக்கான காரணம் அறிந்து மேற்கொண்டு விபத்து ஏற்படாதபடி அங்கு கட்டமைப்பை சரி செய்ய வேண்டும். சாலை பாதுகாப்புக்கு என்று நெடுஞ்சாலைத் துறையில் தனி அலகு உள்ளது. இவர்கள் கூடுதல் கவனம் செலுத்தி சாலை விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது மக்களும் தங்களது தங்களையும், தங்களது குடும்பத்தையும் மனதில் வைத்து வாகனங்களை இயக்க வேண்டும். மேலும் ரேஸ் பைக் ஓட்டுவது, சிறார்கள் வாகனம் ஓட்டுவது போன்றவை தற்போது அதிகமாக நடைபெற்று வருகிறது. பள்ளி படிக்கும் மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் வந்தால் அந்தப் பள்ளிகளே நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் விபத்துகளை பெரும் அளவு குறைக்கலாம்.

உயிரின் மதிப்பை உணர்ந்து...

தா.பேட்டை பகுதியை சேர்ந்த இளையமுருகன்:- மோட்டார் சைக்கிளில் சிசி அதிகமாக உள்ளதா என்பதை பார்த்துதான் இன்றைய இளைஞர்கள் வாகனத்தை வாங்குகின்றனர். அதே சமயம் சாலை விதிகள் குறித்து சட்டம் என்ன சொல்கிறது. சாலையில் பாதுகாப்பாக எவ்வாறு பயணிக்க வேண்டும் என்று தெரியாமல் இருப்பதும் விபத்துகள் அதிகரிப்பதற்கு காரணமாகும். செல்போன் பேசிக்கொண்டு ஒரு கையால் வாகனத்தை ஓட்டுவதும், மூன்று பேர், நான்கு பேர் என இருசக்கர வாகனங்களில் பயணிப்பதும் விபத்துக்கு பெருமளவு காரணமாக அமைகிறது. மனித உயிரின் மதிப்பினை உணர்ந்தும், செயலாற்ற வேண்டிய கடமைகளை எண்ணியும் சாலையில் வாகனத்தை கவனமாக ஓட்ட வேண்டும்.

அறியாமை

பி.மேட்டூரைச் சேர்ந்த கார் டிரைவர் விஸ்வநாதன்:- பெரும்பாலும், கவனச்சிதறல் மற்றும் அலட்சியம் ஆகியவை சாலை விபத்துகளுக்கான முக்கிய காரணங்களாகக் காணப் படுகின்றன. கவனமாக வாகனம் ஓட்டுவதன் மூலம் ஒருவர் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று தோன்றலாம். ஆனால் அது எப்போதும் உண்மை இல்லை. வாகனம் ஓட்டும்போது நீங்கள் மிகவும் கவனமாக இருந்தாலும், மற்ற ஓட்டுனர்களின் அறியாமை சிக்கலை ஏற்படுத்தும். எனவே, உங்கள் வாகனத்திற்கு அருகில் செல்லும் மற்ற வாகனங்களின் செயல்பாட்டை நீங்கள் கவனிக்க வேண்டும். வேகமான நகர் மயமாக்கம், வாகனப்பெருக்கம், தரமற்ற சாலைகள், மோசமான விழிப்புணர்வு நிலைகள், காயத் தடுப்புத் திட்டங்கள் இன்மை, போக்குவரத்து விதிகளை நடைமுறைப் படுத்துவதில் குறைபாடு ஆகியவை சரி செய்தால் மட்டுமே விபத்துகளை குறைக்க முடியும்.

துறையூரை சேர்ந்த பேராசிரியர் சரவணன் நடேசன்:- வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளையும், சாலை விதிகளையும் மதிக்காமல் அலட்சியமாக செல்வதால் தான் அதிகமான வாகன விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. நாட்டின் வளர்ச்சி பாதைக்கு தன்னாலான உதவிகளை செய்வதில் வேகம் வேண்டும். ஆனால் வாகனம் இயக்கும்போது மட்டும் வேகம் கூடாது, நிதானம் மட்டுமே வேண்டும். சாலை பாதுகாப்பு என்பது உயிர் பாதுகாப்பு சாலையில் வாகனம் இயக்கிடும் போது வேகமாக செல்ல வேண்டும் என்பதை விடுத்து பாதுகாப்பாக பத்திரமாக வீட்டுக்குப் போய் சேர வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு வாகன ஓட்டிகளுக்கும் வர வேண்டும். ஏதேனும் ஒரு இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல வேண்டும் என்றால் பத்து நிமிடம் முன்னதாக கிளம்ப வேண்டும். அதை விடுத்து தாமதமாக கிளம்பி அந்த நேரத்தில் ஈடுகட்ட சாலையில் வாகனத்தை வேகமாக இயக்கும் போது சாலையில் தேவையற்ற விபத்து ஏற்பட்டு அதனால் உடல் உறுப்புகள் இழத்தல் நிரந்தர ஊனம் மற்றும் உயிரிழப்பு போன்றவை ஏற்பட்டு சம்பந்தப்பட்ட குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தி விடுகிறது. ஆகவே வாகனம் இயக்கும்போது பாதுகாப்பாக இயக்க வேண்டும்.

கூடுதல் கவனம்

ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலர் குமார்:- சாலை விபத்துகள் நடக்கும் இடங்களை கண்டறிந்து அங்கு குழுவாக சென்று ஆய்வு செய்வோம். மேலும், அங்கு விபத்து ஏற்படாதவகையில் என்னென்ன? நடவடிக்கைகள் தேவையோ, அதை மேற்கொள்வோம். மாசுகட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து வாகனங்களில் ஏர்-ஹாரன் அப்புறப்படுத்துவது, ஏர்-ஹாரன் பொருத்தி வரும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறோம். சமயபுரம் சுங்கச்சாவடி பகுதியில் நெடுஞ்சாலை போலீசாருடன் இணைந்து வாகனங்களில் நெடுந்தூர பயணம் மேற்கொண்டு வரும் வாகன ஓட்டிகளுக்கு சற்று ஓய்வெடுத்துவிட்டு செல்லும்படி அவ்வப்போது அறிவுரை வழங்கி வருகிறோம். 100 மீட்டர் தொலைவுக்குள் விபத்து மூலம் 5 இறப்புகள் நடந்தால் அந்த இடங்களை கருப்பு புள்ளி (பிளாக் ஸ்பாட்) என்று குறிப்பிட்டு அங்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

வாகனம் ஓட்டும் சிறுவர்கள்

போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீஸ் உதவி கமிஷனர் ஜோசப் நிக்சன்:- திருச்சி காவிரி பாலத்தில் பணிகள் முடிந்து வாகன போக்குவரத்து இயக்கப்பட்டால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சீவிநகர் அருகே விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசல் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்படும். அதிகவேகமாக வாகனம் ஓட்டுவதாலேயே விபத்து ஏற்படுகிறது. அதை கட்டுப்படுத்த அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறோம். இதேபோல் ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலத்தில் மன்னார்புரத்தில் இருந்து திண்டுக்கல் சாலையில் பாலத்தின் ஒரு பகுதி பணி முடியும் தருவாயில் உள்ளது. அந்த பணியும் முடிந்தால் திண்டுக்கல் செல்லும் வாகனங்கள் சர்வீஸ் சாலையில் செல்ல வேண்டிய தேவை இருக்காது. மாநகருக்குள் பகல்நேரத்தில் 30 கி.மீ.வேகத்திலும், இரவு நேரத்தில் 40 கி.மீ. வேகத்திலும் தான் செல்ல வேண்டும் என்று விதி இருக்கிறது. இதனை கடைபிடிக்க வேண்டும். 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு வாகனங்களை ஓட்டுவதற்கு பெற்றோர் கொடுக்கக்கூடாது. போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் வாகனங்களை நிறுத்தக்கூடாது. போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைபிடித்தாலே விபத்தில் இருந்துதற்காத்து கொள்ள முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story