ஊத்தங்கரை அண்ணா நகரில் வீடுகளில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு

ஊத்தங்கரை அண்ணா நகரில் வீடுகளில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் பேரூராட்சியை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ஊத்தங்கரை:
ஊத்தங்கரை அண்ணா நகரில் வீடுகளில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் பேரூராட்சியை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. பஸ் நிறுத்தம் எதிரே உள்ள பரசனேரி நிரம்பியது. இந்த ஏரியில் இருந்து நீர் செல்லும் பாதை மற்றும் கால்வாய் முழுவதும் மண்ணை கொட்டி அடைத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதனால் ஏரியில் இருந்து மழைநீர் வெளியேற வழி இல்லாததால் வீடுகளுக்குள் புகுந்தது. ஏரி கரையை ஒட்டி அண்ணா நகரில் மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்குள்ளாகினர். இதனிடையே நேற்று அப்பகுதியை சேர்ந்த ஒருவர் இறந்தார். இதனால் துக்க நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் தண்ணீரில் நடந்து வந்தனர்.
சாலை மறியல்
மேலும் இறந்தவரின் உடலை எடுத்து செல்ல வழியில்லாததால் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கால்வாய் ஆக்கிமிப்புகளை அகற்ற வலியுறுத்தி அவர்கள் அந்த பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஊத்தங்கரை தாசில்தார் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று பொதுமக்கள் மற்றும் கால்வாய் ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
போக்குவரத்து பாதிப்பு
இதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்தில் மண்ணை அகற்றி மழைநீர் வெளியேற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியல் காரணமாக ஊத்தங்கரை- திருப்பத்தூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.






