காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x

சீராக குடிநீர் வழங்காததை கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி

குருபரப்பள்ளி:

சீராக குடிநீர் வழங்காததை கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குடிநீர் பற்றாக்குறை

கிருஷ்ணகிரி வெங்கடாபுரம் ஊராட்சி சிவநந்தபுரம் கிராமத்தில் 100 வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 10-க்கும் மேற்பட்ட குடிநீர் குழாய் இணைப்புகள் அமைக்கப்பட்டன. இதை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி நிர்வாகம் துண்டித்து விட்டது.

இதனால் பொதுமக்கள் அனைவரும் ஒரே இடத்தில் தண்ணீர் பிடித்து வந்தனர். இதில் பலருக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இங்கு சாலை வசதி, சாக்கடை கால்வாய் இல்லை. மேலும் கிராமத்தில் தெருவிளக்குகள் எரிவதில்லை. குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர கோரி பொதுமக்கள் பலமுறை மனு கொடுத்தும் சம்பந்தப்பட்டவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சீராக குடிநீர் வழங்காததை கண்டித்து நேற்று காலை மகராஜகடையில் சிவநந்தபுரம் சாலையில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சாலை மறியலால் மாணவ, மாணவிகள் பள்ளி செல்ல முடியாமல் சிரமப்பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மகராஜகடை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இது தொடர்பாக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story