கால்நடைகளுடன் விவசாயிகள் சாலை மறியல்


கால்நடைகளுடன் விவசாயிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 10 Jan 2023 6:45 PM GMT (Updated: 10 Jan 2023 6:45 PM GMT)

உத்தனப்பள்ளியில் சிப்காட் அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து கால்நடைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 60 பேர் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை

உத்தனப்பள்ளியில் சிப்காட் அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து கால்நடைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 60 பேர் கைது செய்யப்பட்டனர்.

சாலை மறியல்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகாவிற்கு உட்பட்ட உத்தனப்பள்ளி, அயர்னப்பள்ளி, நாகமங்கலம் ஆகிய 3 ஊராட்சிகளில் மொத்தம் 3 ஆயிரத்து 34 ஏக்கர் நிலத்தை 5-வது சிப்காட் அமைக்க அரசு கையகப்படுத்தி வருகிறது. இதற்கு விவசாயிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று காலை விவசாயிகள், பொதுமக்கள், விவசாய சங்க நிர்வாகிகள் ஆடு, மாடுகளுடன் உத்தனப்பள்ளியில் திரண்டனர். அவர்கள் திடீரென கால்நடைகளுடன் ராயக்கோட்டை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி, ராயக்கோட்டை இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் விரைந்து வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாய நிலங்கள் கையகப்படுத்தும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து பெண்கள் உள்பட 60 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story