இளம்பிள்ளை அருகே அரசு மாதிரி பள்ளியில் இடம் கேட்டு மாணவர்கள் திடீர் சாலைமறியல்


இளம்பிள்ளை அருகே அரசு மாதிரி பள்ளியில் இடம் கேட்டு மாணவர்கள் திடீர் சாலைமறியல்
x

இளம்பிள்ளை அருகே அரசு மாதிரி பள்ளியில் இடம் கேட்டு மாணவர்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். துட்டம்பட்டியிலும் முற்றுகை போராட்டம் நடந்தது.

சேலம்

இளம்பிள்ளை:

இளம்பிள்ளை அருகே அரசு மாதிரி பள்ளியில் இடம் கேட்டு மாணவர்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். துட்டம்பட்டியிலும் முற்றுகை போராட்டம் நடந்தது.

அரசு மாதிரி பள்ளி

இளம்பிள்ளை அருகே பெருமாகவுண்டம்பட்டியில் வீரபாண்டி அரசு மாதிரி பள்ளி உள்ளது. இங்கு 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ளன. நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இங்கு 80 மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்படும் நிலையில் 184 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.

தேர்வு நடத்தப்பட்டு மாணவர்கள் பள்ளியில் சேர்க்கப்படுவர் என்று பள்ளி சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக மாணவர்களும், அவர்களுடைய பெற்றோர்களும் பள்ளி முன்பு திரண்டு இருந்தனர்.

சாலைமறியல்

அப்போது மாணவர் தேர்வு குலுக்கல் முறையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தனியார் பள்ளியில் மாணவர்களை சேர்க்க பள்ளி நிர்வாகம் முயற்சி செய்வதாகவும் கூறி திடீரென மாணவர்களும், பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இளம்பிள்ளையில் இருந்து காக்காபாளையம் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தகவல் அறிந்த சேலம் தெற்கு தாசில்தார் பெரியசாமி, துணை தாசில்தார் வைத்தியநாதன், கிராம நிர்வாக அதிகாரி சரவணகுமார் மற்றும் மகுடஞ்சாவடி போலீசார் விரைந்து வந்தனர். தலைமை ஆசிரியர் கவுசல்யாதேவி மற்றும் பெற்ேறார்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு குலுக்கல் முறையில் பள்ளி மாணவர் சேர்க்கை நடந்தது. இந்த திடீர் மறியல் போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

துட்டம்பட்டி

இதேபோல் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியம் துட்டம்பட்டி அரசு மாதிரி பள்ளியிலும் 80 இடங்களுக்கு 180 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 80 மாணவர்கள் பள்ளிக்கு தேர்வு செய்யப்பட்டனர். பள்ளியில் இடம் கிடைக்காத மாணவர்கள் பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.

தகவல் அறிந்த வட்டார கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியம், போலீஸ் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன், சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு உடன்பாடு ஏற்பட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story