குன்னூர் அருகே அடிப்படை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
குன்னூர் அருகே அடிப்படை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குன்னூர்
குன்னூர் அருகே அடிப்படை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
குன்னூர் அருகே உள்ள மேல் குன்னூர் பகுதியில் சமயபுரம் ஆழ்வார்பேட்டை குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு சுமார் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சமயபுரம் ஆழ்வார்பேட்டை குடியிருப்பு பகுதி குன்னூர் நகராட்சியின் 22-வது வார்டிற்கு உட்பட்டது. இங்கு செல்ல பிரதான சாலையிலிருந்து மண் சாலை பிரிந்து செல்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மண் சாலையாக இருந்த பிரதான சாலை மற்றும் குடியிருப்புக்கு செல்லும் மண் சாலை ஆகியவற்றை தார் போட்டு சீரமைக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனை தொடர்ந்து நகராட்சி மூலம் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. ஆனால் பிரதான சாலையின் ஒரு பகுதியை மட்டும் சீரமைத்து மற்றொரு பகுதியை சீரமைக்காமல் விட்டு விட்டனர். இதனால் மழை காலங்களில் சீரமைக்க படாத சாலை பகுதியிலிருந்து மழை தண்ணீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. இதன்காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். எனவே அடிப்படை வசதி, தெரு விளக்கு வசதி, சாலை வசதி ஆகியவை அமைத்துத்தர வேண்டி பொது மக்கள் நேற்று திடீரென்று பாஸ்டியர் இன்ஸ்டியூட் செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் பேச்சுவார்த்தை
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பொதுமக்களின் இந்த போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி அறிந்ததும் குன்னூர் போலீசார் அங்கு சென்று பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதையடுத்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, எங்கள் குடியிருப்பு பகுதிகளில் அடிப்படை வசதிகளான சாலை வசதி, தெருவிளக்கு வசதி போன்றவை இல்லாமல் உள்ளது. இந்த அடிப்படை வசதிகளை மழை காலத்திற்கு முன் செய்து தர வேண்டும். தவறும் பட்சத்தில் நகராட்சி அலுவலகத்தின் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றனர்.