மின் வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சாலை மறியல்
பணி நிரந்தரம் செய்யக்கோரி பெரம்பலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 104 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேர்தல் வாக்குறுதியின் படி...
மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பெரம்பலூர் வட்ட கிளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் மாநில செயலாளர் அகஸ்டின் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியின் படி மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்திட வேண்டும்.
கோஷங்களை எழுப்பினர்
மின் வாரிய அறிவிப்பின்படி தினக்கூலியாக ரூ.380-ஐ ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் வழங்கிட வேண்டும். ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் ஒப்பந்த தொழிலாளியின் கோரிக்கைகளின் சரத்துக்களை சேர்த்து ஒப்பந்தம் போட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் திடீரென்று பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் முன்பு உள்ள சாலைக்கு ஓடி வந்து அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டதோடு, போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
104 பேர் கைது
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மறியலை கைவிடுமாறும், இல்லையென்றால் கைது செய்யப்படுவீர்கள் என்றும் போராட்டக்காரர்களை எச்சரித்தனர். ஆனாலும் போராட்டக்காரர்கள் மறியலை கைவிடாமல் தொடர்ந்து ஈடுபட்டனர். பின்னர் போலீசார் மறியலில் ஈடுபட்ட 104 பேரை வலுக்கட்டாயமாக குண்டு கட்டாக தூக்கி கைது செய்து வேனில் ஏற்றி, அருகே உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். சாலை மறியலால் சுமார் அரை மணி நேரம் பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்தை போலீசார் ஒழுங்குப்படுத்தினர். கைதான அனைவரையும் போலீசார் மாலையில் விடுவித்தனர்.