அரசு பணியாளர் சங்கத்தினர் சாலை மறியல்
டாஸ்மாக் வரவு-செலவு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தி கடலூரில் அரசு பணியாளர் சங்கத்தினர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 4 பெண்கள் உள்பட 33 பேரை போலீசார் கைது செய்தனர்
கடலூர்
காலமுறை ஊதியம்
நியாயவிலைக்கடை, சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட சிறப்பு கால முறை ஊதியம் பெறுபவர்கள், துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், டாஸ்மாக் பணியாளர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம் பெறுபவர்களுக்கு நிரந்தர ஊதிய விகிதம் நிர்ணயம் செய்ய வேண்டும். அரசு பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் கொத்தடிமைகளாக மாற்றும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும்.
பொது விநியோகத் திட்டத்திற்கு என தனித்துறையை உருவாக்க வேண்டும். டாஸ்மாக் வரவு-செலவு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர், சென்னை உள்ளிட்ட 5 இடங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
சாலை மறியல்
அதன்படி கடலூரில் நேற்று பழைய கலெக்டர் அலுவலகம் அருகில் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் மாநில பொருளாளர் சரவணன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநில அமைப்பு செயலாளர் சிவக்குமார், மாநில சிறப்பு தலைவர் சீனுவாசன், பொருளாளர் ஜெய்கணேஷ், மாநில துணைத் தலைவர் வீரப்பன், மாவட்ட செயலாளர்கள் விவேகானந்தன், பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கடலூர் புதுநகர் போலீசார் மறியலில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட 33 பேரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.