தோட்ட தொழிலாளர்கள் சாலை மறியல்


தோட்ட தொழிலாளர்கள் சாலை மறியல்
x

சம்பளம் வழங்காததை கண்டித்து கூடலூரில் தோட்ட தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நீலகிரி

கூடலூர்,

சம்பளம் வழங்காததை கண்டித்து கூடலூரில் தோட்ட தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

கூடலூர் சில்வர் கிளவுட் பகுதியில் தனியார் எஸ்டேட்டில் ஏராளமான தோட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் சரியாக வழங்கவில்லை என புகார் எழுந்தது. இதனால் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் 4 மாத நிலுவை சம்பளத்தை வழங்க கோரி நேற்று எஸ்டேட் நிர்வாக அலுவலகத்தை தோட்ட தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. இதைத்தொடர்ந்து கூடலூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தை

போராட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் போஜராஜ், நிர்வாகிகள் முகமது கனி, ராஜி, உசேன், ரவி, டேவிட் மற்றும் தொழிலாளர்கள் சாலையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தகவல் அறிந்த கூடலூர் தாசில்தார் சித்தராஜ், போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் குமார், இன்ஸ்பெக்டர் அருள் மற்றும் போலீசார் விரைந்து வந்து தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்ந்து அதிகாரிகள், எஸ்டேட் நிர்வாகம் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளின் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை நடத்தி சமூக தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்று ஒரு மணி நேரத்துக்கு பின்னர் மறியல் போராட்டத்தை தொழிலாளர்கள் கைவிட்டனர். அதன் பின்னர் போக்குவரத்து சீரானது. தொடர்ந்து பகல் 2 மணி வரை பல கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.

சம்பளம் வழங்க உறுதி

பின்னர் 1 மாத சம்பளம் இன்று (நேற்று) வழங்குவதாக எஸ்டேட் நிர்வாகம் உறுதியளித்தது. தொடர்ந்து ஆர்.டி.ஓ. தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்று தொழிலாளர்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூறும்போது, 4 மாத சம்பளம், 2 வருட போனஸ் மற்றும் பண பலன்கள் வழங்கப்படாமல் உள்ளது. இதனால் போராட்டம் நடத்தப்பட்டது என்றனர்.


Next Story