பா.ம.க.வினர் சாலை மறியல்


பா.ம.க.வினர் சாலை மறியல்
x

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருப்பத்தூர் மாவட்டத்தில் பா.ம.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்

சாலை மறியல்

நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனம் வயல் வெளிகளில் சுரங்கம் தோண்டுவதை நிறுத்தக்கோரி என்.எல்.சி நிறுவனத்தை பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சியினர் முற்றுகையிட்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதனை கண்டித்து, வாணியம்பாடி பஸ் நிலையத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினர் மாவட்ட செயலாளர் பாலு தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது ஒருவர் டயரை தீ வைத்து கொளுத்த முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை வாணியம்பாடி டவுன் போலீசார் கைது செய்தனர்.

வாணியம்பாடி - ஆலங்காயம் சாலையில் நேதாஜி நகர் பகுதியில் கார் மற்றும் இருசக்கர வாகன டயரை பா.ம.க.வினர் சிலர் தீ வைத்து சாலையில் வீசிசென்றனர். அப்போது அந்தவழியாக சென்ற போலீசார் மற்றும் பொதுமக்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை ஜங்ஷன் பஸ் நிறுத்தம் பகுதியில் மாநில துணை அமைப்பாளர் குட்டிமணி, ஜோலார்பேட்டை நகர செயலாளர் ஞானமோகன் ஆகியோர் தலைமையிலும், பொன்னேரி பகுதியில் ஒன்றிய செயலாளர் லோகநாதன் தலைமையிலும், பால்னாங்குப்பம் பகுதியில் மாநில மகளிர் அணி தலைவர் நிர்மலா ராஜா, திருப்பத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் வீரமணி ஆகியோர் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட மாநில செயற்குழு உறுப்பினர் பொன்னுசாமி உள்பட 41 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சாலை மறியல் காரணமாக பல்வேறு இடங்களில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ஆம்பூர்

ஆம்பூர் பைபாஸ் சாலையில் பா.ம.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்த தகவலறிந்து வந்த ஆம்பூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் வைத்தனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூரில், திருப்பத்தூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பள்ளி அருகே முன்னாள் எம்.எல்.ஏ.வும், மாநில வன்னியர் சங்க பொது செயலாளருமான டி.கே.ராஜா தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில் தலைமையில் போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அனைவரையும் கைது செய்தனர். இதனால் திருப்பத்தூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Related Tags :
Next Story