பா.ம.க.வினர் சாலை மறியல்
திட்டக்குடியில் போலீசாரை கண்டித்து பா.ம.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திட்டக்குடி:
திட்டக்குடி அருகே சிறுமுளை கிராமத்தை சேர்ந்தவர் வீரமணிகண்டன். பா.ம.க. பிரமுகரான இவர், உறவினரான அரியலூர் மாவட்டம் பாளையம் கிராமத்தை சேர்ந்த பிரவீனா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரவீனாவின் சித்தப்பாவான ஆறுமுகம் என்பவர் தன்னை அடித்து விட்டதாக வீரமணிகண்டன் திட்டக்குடி போலீசில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார், ஆறுமுகம் தரப்பினரையும், வீரமணிகண்டன் தரப்பினரையும் போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். அப்போது இருதரப்பினரும் போலீசார் முன்னிலையில் ஒருவருக்கொருவர் திட்டி, வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதைபார்த்த போலீசார், சம்பந்தப்பட்ட நபர்களை தவிர மற்றவர்கள் போலீஸ் நிலையத்தை விட்டு வெளியேறுங்கள் என கூறினர். இதில் ஆத்திரமடைந்த வீரமணிகண்டனுடன் வந்த பா.ம.க.வினர் போலீசாரிடம் ஒருதலைப்பட்சமாக பேசுவதாக கூறியும், போலீசாரை கண்டித்தும் திடீரென போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனே போலீசார் விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து, கலைந்து போக செய்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பினரிடம் விசாரித்து வருகிறார்கள்.