ஊரக உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சாலை மறியல்


ஊரக உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சாலை மறியல்
x

கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட ஊரக உள்ளாட்சித்துறை ஊழியர்கள் 105 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர்

ஆர்ப்பாட்டம்-சாலை மறியல்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு.வின் பெரம்பலூர் மாவட்ட ஊரக உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் குணசேகரன் தலைமை தாங்கினார். தலைவர் பொன்ராஜ் முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவர் ரெங்கநாதன், செயலாளர் அகஸ்டின் உள்ளிட்டோர் ஊரக உள்ளாட்சித்துறை ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர். பின்னர் ஊரக உள்ளாட்சித்துறை ஊழியர்கள் திடீரென்று பஸ் நிலையம் முன்பு உள்ள சாலைக்கு ஓடி வந்து அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நிரந்தரப்படுத்த வேண்டும்

அப்போது அவர்கள் நகராட்சி, பேரூராட்சி நிரந்தர பணிகளை ஒழித்து தனியார் கைகளில் தாரை வார்க்கும் அரசாணை எண் 10, 139- ஐ உடனடியாக திரும்ப பெற வேண்டும். மே மாத ஊதியத்தை முழுமையாக வழங்கிட வேண்டும். ஊதியத்தில் பிடித்தம் செய்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை (இ.பி.எப்.) அந்த தொழிலாளரின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். முந்தைய காலங்களுக்கு பிடித்தம் செய்த அந்த நிதியை, அவரது வங்கி கணக்கில் செலுத்திட வேண்டும். தினக்கூலி, சுய உதவிக்குழு, ஒப்பந்த தொழிலாளி என பல்வேறு பெயர்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்யும் தூய்மை பணியாளர்கள், டிரைவர்கள், குடிநீர் பணியாளர்கள் உள்ளிட்ட ஊழியர்களை நிரந்தப்படுத்த வேண்டும்.

70 பெண்கள் உள்பட 105 பேர் கைது

மாவட்ட கலெக்டரால் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம், 8 மணி நேர வேலை, வார விடுப்பு, பண்டிகை கால விடுப்பு உள்ளிட்ட அடிப்படை சட்டங்களை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனை (இ.எஸ்.ஐ.) அடையாள அட்டை, ஊதிய சீட்டு, பாதுகாப்பு உபகரணங்கள், சீருடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த பெரம்பலூர் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 70 பெண்கள் உள்பட 105 பேரை கைது செய்து வேன்களில் ஏற்றி அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். பின்னர் மாலையில் கைதான அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.


Next Story