மாணவர்கள் சாலை மறியல்
வடமதுரை அருகே அரசு பஸ் வராததை கண்டித்து பள்ளி மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
வடமதுரை அரசு மேல்நிலைப்பள்ளியில் கொம்பேறிபட்டி, ஸ்ரீராமபுரம், வெங்கடாசலபுரம், செமனாம்பட்டி, காடையனூர், மம்மாணியூர், ஊரானூர், புது கொம்பேறிபட்டி, கருங்கல்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள், திண்டுக்கல்லில் இருந்து மம்மானியூருக்கு இயக்கப்படுகிற அரசு பஸ் மூலம் பள்ளிக்கு சென்று வந்தனர்.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக திண்டுக்கல்-மம்மானியூர் பஸ் இயக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் அய்யலூர் சென்று அங்கிருந்து வேறு பஸ் மூலம் வடமதுரையில் உள்ள பள்ளிக்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு உரிய நேரத்தில் செல்லமுடியாமல் கால தாமதமாக சென்றுள்ளனர். இதனால் பள்ளியில் ஆசிரியர்கள் தாமதமாக வந்த மாணவர்களுக்கு (விடுப்பு) ஆப்சென்ட் போட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் நேற்று கொம்பேறிபட்டி நால்ரோடு அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வேடசந்தூர் தாசில்தார் சக்திவேலன், அரசு போக்குவரத்துக்கழக அதிகாரி பூமிநாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நேற்று (இன்று) மாலை முதல் பஸ் உரிய முறையில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.