நரிக்குறவ இன மக்கள் சாலை மறியல்
நரிக்குறவ இன மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவெறும்பூர் ஒன்றியம் பழங்கனாங்குடி ஊராட்சி பூலாங்குடி காலனியில் 150-க்கும் மேற்பட்ட நரிக்குறவ இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்கள் இறந்தால் துவாக்குடி உளுந்துனி குளம் பகுதியில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்வது வழக்கம். இந்த நிலையில் சுடுகாட்டுக்கு செல்ல பாதை வசதி இல்லை என்றும், பாதை வசதி கேட்டு ஊராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியை சேர்ந்த உமா (வயது 55) என்பவர் மரணம் அடைந்தார். அவரது உடலை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல கடும் சிரமம் அடைந்தனர். இந்நிலையில் நேற்று காலை நரிக்குறவ மக்கள் சுடுகாட்டுக்கு செல்ல சாலை அமைத்து தர கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் விரைவில் சாலை அமைப்பதற்கான பணி மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்ததை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் கூறும்போது, நரிக்குறவ இன மக்கள் சுடுகாட்டுக்கு செல்வதற்கான சாலை பணிகள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது. இந்த பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்றார்.