காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்


காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
x

நாகை அருகே 3 மாதமாக முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

நாகை அருகே 3 மாதமாக முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காலிக்குடங்களுடன் சாலை மறியல்

நாகையை அடுத்த மஞ்சக்கொல்லை ஊராட்சிக்குட்பட்ட கண்ணாரத்தெரு பகுதியில் கடந்த 3 மாதமாக முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து அந்த பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் மஞ்சக்கொல்லை கடைத்தெருவில் நாகை-திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது கடந்த 3 மாத காலமாக தங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர் வழங்கவில்லை. இதனால் நீண்ட தூரம் சென்று குடிநீர் எடுத்து வர வேண்டிய நிலை உள்ளது. காலையில் அலுவலகத்திற்கு செல்லவும்,பள்ளிக்கு குழந்தைகளை அனுப்புவதற்கும் சிரமம் ஏற்படுகிறது. எனவே எங்கள் பகுதிக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், முறையாக குடிநீர் வழங்காத தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தை கண்டித்தும் பெண்கள் கோஷங்கள் எழுப்பினர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இந்த சாலை மறியலால் நாகை-திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story