குடிநீர் திருட்டை கண்டித்து சாலை மறியல்
அன்னூர் குறுக்கலியாம்பாளையத்தில் குடிநீர் திருட்டை கண்டித்துபொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அன்னூர்
கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியம் ஒட்டர்பாளையம் ஊராட்சியில் குறுக்கலியாம்பாளையம் கிராமம் அன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் உள்ளது.
இங்கு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல் நிலைத் தொட்டியில் இருந்து வீடுகள் மற்றும் பொது குழாய்களில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக இரவு நேரத்தில் சிலர் திருட்டுத்தனமாக தண்ணீரை திருடுகின்றனர். இதனால் பொதுக் குழாய் மற்றும் வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுவது இல்லை.
இதனால் குறுக்கலியாம்பாளையத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது.
இது குறித்து ஊராட்சி நிர்வாகத்தில் புகார் தெரிவித்தும் நடவ டிக்கை இல்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று காலை அன்னூர்- ஊட்டி ரோடு குறுக்கலியாம்பாளை யத்தில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை அறிந்த அன்னூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா, சப்- இன்ஸ் பெக்டர் சிலம்பரசன் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் ஊராட்சி தலைவர் சுமதி கிருஷ்ணமூர்த்தியும் அங்கு வந்து தண்ணீர் திருட்டு தடுக்கப்படும். அதற்க காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதை ஏற்று பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டனர்.