கிரிவலம் சென்ற பக்தர்களுக்கு பஸ் வசதி இல்லாததால் சாலை மறியல்
பவுர்ணமி கிரிவலம் சென்ற பக்தர்கள் ஊருக்கு திரும்ப பஸ் வசதி இல்லாததால், பஸ்சை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பவுர்ணமி கிரிவலம் சென்ற பக்தர்கள் ஊருக்கு திரும்ப பஸ் வசதி இல்லாததால், பஸ்சை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பவுர்ணமி கிரிவலம்
திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் பவுர்ணமி நாட்களில் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்ல லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று முன்தினம் அதிகாலையில் தொடங்கி நேற்று அதிகாலையில் நிறைவடைந்தது.
இதையொட்டி திருவண்ணாமலையில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். தொடர்ந்து கிரிவலம் சென்ற பக்தர்கள் பலர் நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
பவுர்ணமி கிரிவலத்தையொட்டி நேற்று முன்தினம் மதியத்தில் இருந்து நேற்று காலை வரை நகரில் 9 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
பஸ்சை சிறைபிடித்து சாலை மறியல்
திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி அருகில் அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து தர்மபுரி, சேலம், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்பட்டன.
இதில் சேலம், பெங்களூரு பகுதிகளுக்கு நேற்று அதிகாலை முறையான பஸ்கள் இயக்கப்பட வில்லை என்றும், இதனால் கிரிவலம் சென்று வந்த பக்தர்கள் 2 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்வதற்காக இயக்கப்பட்ட பஸ்சை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று எச்சரித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர், போலீசார் தன்னை ஒருமையில் பேசியதாக தெரிவித்தார்.
தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். பின்னர் அவர்களுக்கு பஸ் வசதி செய்து கொடுக்கப்பட்டது.
இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.