ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கக்கோரி சாலை மறியல்


ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கக்கோரி சாலை மறியல்
x

காவனூர் கிராமத்தில் ஆரம்பசுகாதார நிலையம் அமைக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ராணிப்பேட்டை

ஆரம்ப சுகாதார நிலையம்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த காவனூர் கிராமத்தில் உள்ள மந்தவெளி பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கக் கோரி பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதன்பேரில் அப்பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க கடந்த டிசம்பர் மாதம் அரசாணை வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கான இடத்தினை தேர்வு செய்யும் பணியை மேற்கொண்டனர். ஆனால் அங்கு போதிய இட வசதி இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் காவனூர் மற்றும் சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.

சாலைமறியல்

இருப்பினும் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டுமென அதிகாரிகளை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இந்நிலையில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கக் கோரி நேற்று காவனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் காவனூர் பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் மந்தவெளி பகுதியில் பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினால் போதுமான இடம் கிடைக்கும். அந்த இடத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என கோஷமிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆற்காடு தாசில்தார் வசந்தி மற்றும் திமிரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story