கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல்
ராணிப்பேட்டையில் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
ராணிப்பேட்டை பழைய பஸ்நிலையம் அருகே உள்ள மாவட்ட தலைமை தபால் நிலையம் முன்பு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டு கொள்ளாத மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மாநில நிர்வாகி ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
அத்தியாவசிய பொருட்களான சமையல் கியாஸ், பெட்ரோல், டீசல், மளிகை பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், இளைஞர்களுக்கு சமூக பாதுகாப்புடன் கூடிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து முத்துக்கடையிலிருந்து ஆற்காடு செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.