அ.தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டம்


அ.தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டம்
x

எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து நெல்லை மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 243 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து நெல்லை மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 243 பேர் கைது செய்யப்பட்டனர்.

சாலை மறியல்

சென்னையில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நேற்று சட்டமன்ற நடவடிக்கைகளை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லையில் வண்ணார்பேட்டை மேம்பாலம் அருகில் நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் அ.தி.மு.க.வினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோஷம்

அப்போது, தி.மு.க. அரசு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதில் மாநில அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா, அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், பொருளாளர் சவுந்தரராஜன், எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் கல்லூர் வேலாயுதம், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் பால்துரை, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் அம்மா செல்வகுமார், பாளையங்கோட்டை ஒன்றிய செயலாளர் முத்துகுட்டி பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனால் வண்ணார்பேட்டை ரவுண்டானா பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

126 பேர் கைது

இதையடுத்து அங்கு தயார் நிலையில் இருந்த போலீசார், மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க.வைச் சேர்ந்த 4 பெண்கள் உள்பட 126 பேரை கைது செய்தனர். போலீசார் அவர்களை கொக்கிரகுளம் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அங்கு அவர்களுக்கு போலீசார் சார்பில் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்து கொண்டு வரப்பட்டது. அதே நேரத்தில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா ஏற்பாட்டில் பிரியாணி மற்றும் சைவ உணவு, தண்ணீர் பாட்டில்களும் வரவழைக்கப்பட்டது. ஆனால் போலீசார் அந்த சாப்பாட்டை மண்டபத்துக்குள் அனுமதிக்கவில்லை.

இதை கண்டித்து மண்டப வளாகத்துக்குள் அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினார்கள். இதையடுத்து அ.தி.மு.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உணவு வாகனத்தையும் போலீசார் மண்டபத்துக்குள் அனுமதித்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

திசையன்விளை-களக்காடு

திசையன்விளை பழைய பஸ் நிலைய பகுதியில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் ஏ.கே.சீனிவாசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீர் என சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட மகளிரணி செயலாளரும், திசையன்விளை பேரூராட்சி தலைவருமான ஜான்சிராணி, மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணைச்செயலாளர் உவரி ராஜன் கிருபாநிதி, திசையன்விளை நகர செயலாளரும் பேரூராட்சி துணைத்தலைவருமான ஜெயக்குமார், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.பி.கே.செல்வராஜ், எம்.ஜி.ஆர்.மன்ற துணைச்செயலாளர் நாராயண பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட 45 பேரை திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி கைது செய்தார்.

களக்காடு அண்ணா சிலை அருகே அ.தி.மு.க.வினர் நகர செயலாளர் செல்வராஜ் தலைமையில், முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் ராஜேந்திரன் முன்னிலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து 20 பேரை களக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் மற்றும் போலீசார் கைது செய்தனர்.

அம்பை

இதேபோல் அம்பையில் நடந்த மறியலில் அ.தி.மு.க. நகர செயலாளர் அறிவழகன், மணிமுத்தாறு முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் சிவன் பாபு, ஒன்றிய துணை செயலாளர் பிராங்கிளின், அடையகருங்குளம் பஞ்சாயத்து துணை தலைவர் மதன கிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். இதில் 25-க்கும் மேற்பட்டோரை அம்பை போலீசார் கைது செய்தனர்.

விக்கிரமசிங்கபுரத்தில் நடந்த மறியலில் நகர செயலாளர் கண்ணன் தலைமையில், முன்னாள் நகராட்சி துணைத்தலைவர் கணேச பெருமாள், மீனாட்சிசுந்தரம், பத்மா, சந்தனமாரி, கவுன்சிலர் சொள்ள மாடன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட 23 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேரன்மாதேவி-ராதாபுரம்

ராதாபுரம் பஸ் நிலையத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க. மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் தாமோதரன் உள்ளிட்ட 4 பேரை ராதாபுரம் போலீசார் கைது செய்தனர்.

சேரன்மாதேவி பஸ் நிலையம் அருகில் நகர செயலாளர் வக்கீல் பழனிகுமார் தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கூனியூர் மாடசாமி, சேரன்மாதேவி ஒன்றிய செயலாளர் மாரிசெல்வம், நிர்வாகி பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று வீரவநல்லூர் பஸ்நிலையம் அருகிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.


Related Tags :
Next Story