பா.ம.க.வினர் சாலை மறியல் போராட்டம்
கொள்ளிடம் சோதனை சாவடி அருகே பா.ம.க.வினர் சாலை மறியல் போராட்டம்; 20 பேர் மீது வழக்கு
கொள்ளிடம்:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் சோதனை சாவடி அருகே சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் லண்டன் அன்பழகன் தலைமையில் நேற்று இரவு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. என்.எல்.சி. நிர்வாகம் சார்பில் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்து நடந்த சாலை மறியல் போராட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி, கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் பாலதண்டாயுதம் மற்றும் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விவசாய நிலங்களை கையகப்படுத்தும் என்.எல்.சி.க்கு எதிராக கோஷமிட்டனர். தொடர்ந்து கோஷம் போட்டுக்கொண்டே ஊர்வலமாக சென்று கொள்ளிடம் கடைவீதியில் ஆர்ப்பாட்டம் முடிவு பெற்றது. இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் மீது கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.