ரூ.10 லட்சம் வழங்கக்கோரி சாலை மறியல் போராட்டம்


ரூ.10 லட்சம் வழங்கக்கோரி சாலை மறியல் போராட்டம்
x

விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்கக்கோரி பேரணாம்பட்டு அருகே சாலை மறியல் போராட்டம் நடந்தது.

வேலூர்

விபத்தில் 7 பெண்கள் பலி

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சராகி நின்ற சுற்றுலா வேன் மீது மினி லாரி மோதியதில் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு, ஓணாங்குட்டை பகுதியை சேர்ந்த செல்வி என்ற சேட்டம்மாள், சாவித்திரி, தெய்வானை, கலாவதி, மீரா, தேவகி, கீதாஞ்சலி ஆகிய 7 பெண்கள் உயிரிழந்தனர்.

அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு நேற்று மாலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இறந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரண உதவித்தொகையாக தலா ரூ.1 லட்சம், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் அறிவிக்கப்பட்டது.

சாலை மறியல்

இந்த நிலையில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினர், ஓணாங்குட்டை கிராம மக்கள், உறவினர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு ஓணாங்குட்டை கிராமத்தில், பேரணாம்பட்டு - ஆம்பூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றும், அதுவரை உடல்களை அடக்கம் செய்ய மாட்டோம் என்றும் கூறி சுமார் 1 மணி நேரம் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதனால் பேரணாம்பட்டு - ஆம்பூர் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்- இன்ஸ்பெக்டர் சரத்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.

அப்போது இது குறித்து உடனடியாக தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என உறுதியளித்தனர். இதனை ஏற்று அவர்கள் கலைந்து சென்றனர்.


Related Tags :
Next Story