மின்தடையை கண்டித்து சாலை மறியல்

நத்தம் அருகே மின்தடையை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நத்தம் அருகே செல்லப்பநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மேலமேட்டுப்பட்டி கிராமத்தில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்தது. இதனால் குறைந்த மின்னழுத்தம் ஏற்பட்டு அந்த கிராமத்தில் உள்ள வீடுகளில் மின்சாதன பொருட்கள் பழுதாகின. மேலும் இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டதால் மாணவ-மாணவிகள், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பாடம் படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதுகுறித்து நத்தம் மின்வாரிய அதிகாரிகளிடம் கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மீண்டும் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது.
இந்தநிலையில் மின்தடை ஏற்படுவதை கண்டித்து மேலமேட்டுப்பட்டி கிராம மக்கள் நேற்று முன்தினம் இரவு அங்குள்ள மதுரை-நத்தம் நான்கு வழிச்சாலையில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நத்தம் போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தடையின்றி மின்சாரம் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் மதுரை-நத்தம் நான்கு வழிச்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.