செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்


செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்
x

வாணியம்பாடியில் குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர்

சாலை மறியல்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பெருமாள்பேட்டை குடியிருப்பு பகுதியில் தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தின் 3-வது தளத்தில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கட்டிடம் பாதுகாப்பற்ற முறையில் உள்ளதாக கூறி அப்பகுதி மக்கள் அதிகாரியிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் 50-க்கும் மேற்பட்டோர் பெருமாள்பேட்டை கூட்ரோட்டில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் வாணியம்பாடி டவுன் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது செல்போன் கோபுரம் அமைப்பது குறித்து அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த மறியல் போராட்டத்தால் வாணியம்பாடி - ஆலங்காயம் சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பள்ளத்தில் இறங்கி...

இதேபோல் வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட அம்பலால்நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான காலி மனையில் செல்போன் கோபுரம் அமைக்க பொக்லைன் எந்திரம் மூலம் 20 அடி பள்ளம் தோண்டி பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்பலால் நகர் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் செல்போன் கோபுரம் அமைப்பதற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கி கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இது குறித்து அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இருப்பினும் அவர்களை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story