தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு குறவர் இனமக்கள் சாலை மறியல்; பெண்கள் உள்பட 56 பேர் கைது


தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு குறவர் இனமக்கள் சாலை மறியல்; பெண்கள் உள்பட 56 பேர் கைது
x

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட குறவர் இன மக்கள் 56 பேரை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். போலீசாருடன் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் போராட்டக்காரர்கள் 4 பேருக்கு காயம் ஏற்பட்டது.

தேனி

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட குறவர் இன மக்கள் 56 பேரை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். போலீசாருடன் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் போராட்டக்காரர்கள் 4 பேருக்கு காயம் ஏற்பட்டது.

சாலை மறியல்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வனவேங்கைகள் கட்சியின் நிர்வாகிகள் சிலர் தலைமையில் குறவர் இன மக்கள் ஏராளமானோர் இன்று வந்தனர். அப்போது அவர்கள் தமிழக எம்.பி.சி பட்டியலில் நரிக்குறவர் என்னும் பெயரில் குறவர் என்பதை நீக்க வேண்டும், நரிக்கார் என்பதை நரிக்குறவர் என்று அழைக்கக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை பிடித்து வந்தனர்.

பின்னர் திடீரென்று அவர்கள் கண்களில் கருப்புத்துணி கட்டிக்கொண்டு கலெக்டர் அலுவலகம் முன்பு மதுரை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களுடன் போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் குறவர் என்ற தங்களின் பெயரை வேறு சமுதாயத்தின் பெயருடன் சேர்த்து குறிப்பிடுவதை தடுக்க வேண்டும் என்றும், இதுகுறித்து எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கலெக்டர் ஆகியோரில் யாராவது வந்து தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வாக்குறுதி கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

தள்ளுமுள்ளு

இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது. மறியல் காரணமாக சாலையின் இருபுறமும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் மறியலில் ஈடுபட்ட ஆண்கள், பெண்களை குண்டுக்கட்டாக போலீசார் கைது செய்தனர்.

கைது செய்து வேனில் ஏற்றியபோது, சிலர் வேனை சுற்றி அமர்ந்து போராட்டம் நடத்தினர். அப்போது பெண்கள் மேல் ஆண் போலீசார் கை வைத்து தள்ளியதாக கூறி சிலர் போலீசாரை கண்டித்து போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவானது.

56 பேர் கைது

இதையடுத்து மறியல் செய்த 32 பெண்கள் உள்பட 56 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டபோது, 4 பேருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதில் மணி என்ற கூலித்தொழிலாளி மயங்கி விழுந்தார். சந்திரன் என்ற வாலிபர் தனது வயிற்றில் போலீசார் எட்டி உதைத்ததாக கூறி வலியால் துடித்தார். பின்னர் அவர்கள் இருவரும் 108 ஆம்புலன்சு மூலம் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் மறியலில் ஈடுபட்டவர்களை வேன்களில் ஏற்றி தேனியில் உள்ள 2 திருமண மண்டபங்களில் போலீசார் அடைத்தனர்.

இந்த சாலை மறியலால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இந்த மறியல் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 More update

Related Tags :
Next Story