மாடுகளுடன் உரிமையாளர்கள் சாலை மறியல்


மாடுகளுடன் உரிமையாளர்கள் சாலை மறியல்
x

தஞ்சையில் சுற்றித்திரியும் மாடுகள் பிடிப்பதை கண்டித்து மாடுகளுடன் உரிமையாளர்கள் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர்

தஞ்சையில் சுற்றித்திரியும் மாடுகள் பிடிப்பதை கண்டித்து மாடுகளுடன் உரிமையாளர்கள் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள்

தஞ்சை மாநகராட்சி பகுதிகளில் சாலைகளில் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படுவதுடன், விபத்துக்களால் உயிர்பலிகளும் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும் என பலர் கோரிக்கை வைத்தனர். இந்தநிலையில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாகவும் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி கடந்த 1-ந் தேதி முதல் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்கும் பணியில் மாநகராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். பிடிபடும் மாடுகள் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அடைத்து வைக்கப்படுவதுடன் அவற்றின் உரிமையாளர்களுக்கு மாடு ஒன்றுக்கு ரூ.3 ஆயிரமும், கன்றுகளுக்கு ரூ.1,500-ம் அபராதம் விதிக்கப்பட்டு, மாடுகள் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

சாலை மறியல்

இப்படி மாடுகளை பிடித்து அபராதம் விதிக்கப்படுவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி நேற்றுகாலை 50-க்கும் மேற்பட்ட மாடுகளுடன் அவற்றின் உரிமையாளர்கள் தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் மாடுகளுடன் நின்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அறிந்த வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா, தஞ்சை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட மாடு வளர்ப்போரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள், தஞ்சை மாநகர பகுதியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் உள்ளன. நாங்கள் மாடுகள் வளர்த்து பால் வியாபாரம் செய்து அவற்றின் மூலம் பிழைப்பு நடத்தி வருகிறோம். மாடுகளை பிடித்து அபராதம் விதித்தால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. மாட்டு தீவனங்களின் விலையும் அதிகரித்துவிட்டது.

மானிய விலையில் தீவனம்

பகல் நேரங்களில் மேய்ச்சலுக்காக சாலைகளில் நடந்து செல்லும் மாடுகளை பிடிக்கக்கூடாது. இரவு நேரங்களில் சுற்றித்திரியும் மாடுகளை வேண்டுமானால் பிடிக்கலாம். அந்த காலத்தில் மேய்ச்சலுக்காக தரிசு நிலம் இருந்தது. தற்போது அவை கிடையாது. எனவே மேய்ச்சலுக்கு நிலம் ஒதுக்கி தர வேண்டும். மாடுகள் வளர்ப்போருக்கு தீவனங்களை மானிய விலையில் வழங்க வேண்டும் என கூறினர்.

இதை கேட்டறிந்த போலீசார், உங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி மாநகராட்சி நிர்வாகத்திடம் கொடுங்கள். சாலை மறியல் போராட்டத்தை தற்போது கைவிட்டு கலைந்து செல்லுங்கள் என கூறினர். இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தை மாடு வளர்ப்போர் கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story