சாலை, பாலப்பணிகளை உரிய காலத்திற்குள் முடிக்க வேண்டும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு


சாலை, பாலப்பணிகளை உரிய காலத்திற்குள் முடிக்க வேண்டும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
x

மக்கள் சிரமத்திற்கு ஆளாகாதபடி சாலை மற்றும் பாலப் பணிகளை உரிய காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழ்நாட்டில் சாலை மற்றும் பாலப் பணிகள் முன்னேற்றம் குறித்து நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

சாதனைகள்

தமிழக அரசு, மக்கள் நலனை மட்டுமே முன்னிறுத்தி, கடந்த ஈராண்டில் தமிழ்நாட்டினுடைய வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களில் முத்திரை பதிக்கக்கூடிய வகையில் சாதனைகளை படைத்து வருகிறது. பல புதிய திட்டங்களை, மாநிலத்தினுடைய வளர்ச்சியை கருத்தில் கொண்டு செயல்படுத்தி வருகிறது. அவை பற்றிய தொடர்ச்சியான ஆய்வுகள்தான் தொய்வில்லாத நிர்வாகத்தை உருவாக்கும்.

தொழிற்சாலைகளுக்கான உள்கட்டமைப்பில் அரசு அதிக கவனம் செலுத்தி வருவதால், பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள். தொழிற்சாலைகளுக்கு உகந்த சூழ்நிலைகளான இடம் கையகப்படுத்தல், போக்குவரத்து வசதி, ஏற்றுமதிக்கான வசதிகள், உள் கட்டமைப்புகள் உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சவால்களை நாம் எதிர்கொண்டாலும், அத்தகைய சவால்களில் தீவிர கவனம் செலுத்தி, பிரச்சினைகளுக்கு இடம் தராமல், உலகளாவிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில்கள் தொடங்கவும், அதற்காக தொழில் முதலீடுகளை பெறவும் முழு அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டு வருகிறோம்.

மனநிறைவு

அந்த அடிப்படையில்தான், தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டு காலமாக தொழில் முதலீடுகள் குவிந்த வண்ணம் உள்ளன. ஏற்கனவே 5 பில்லியன் டாலர் அளவிற்கு தொழில் முதலீடுகளுக்கு உத்தரவாதம் தரப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு தொழில் துறையில் எதிர்பார்த்த முதலீட்டை வெகுவிரைவில் அடைந்துவிடும் என்று நாளேடுகள் தலையங்கம் தீட்டிக் கொண்டிருக்கின்றன.

மாநில நலனுக்கு, ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு சாலைகளும், பாலங்களும் தவிர்க்க இயலாத முக்கியத்துவத்தை பெற்றுள்ளன என்றால் அது மிகையல்ல. சீரான சாலைகளும், பாலங்களும் பயணங்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் அது அடிப்படையான தேவை. இதை கருத்தில் கொண்டுதான், கடந்த 10.5.2023 அன்று நடைபெற்ற கூட்டத்தில், தமிழகத்தில் நடக்கும் அனைத்து சாலை மற்றும் பாலப் பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக கலந்தாய்வுக் கூட்டத்தை நடத்தினோம்.

அதன் விளைவாக பல பணிகளில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. அது ஓரளவிற்கு மனநிறைவை அளிக்கிறது. இருப்பினும் குறிப்பிட்ட சில இடங்களில் தொடர்ந்து தொய்வையும் காண முடிகிறது.

தாமதத்திற்கு காரணம்

பொதுவாக, சாலைப் பணிகளும், பாலப் பணிகளும் நடைபெறும் காலங்களில் அப்பகுதிகளில் போக்குவரத்து உள்ளிட்ட பல சிரமங்களை பொது மக்கள் சந்திக்க நேரிடும். சாலை மற்றும் பாலப் பணிகளை மேற்கொள்ளும்போது, தேவையற்ற தாமதங்கள் ஏற்பட்டால், மக்கள் மேலும் சிரமத்திற்கு ஆளாகக்கூடும். அதனால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படக்கூடும் என்பதை கருத்திலே கொண்டு, உரிய காலத்திற்குள் பணிகளை முடித்திட வேண்டும்.

தாமதத்திற்கு பொதுவான காரணம், நில எடுப்பு மற்றும் துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பில் ஏற்படும் பிரச்சினைகள்தான். இத்தகைய பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காணும் வகையில், தலைமைச் செயலாளர், சம்பந்தப்பட்ட துறைச் செயலாளர்களுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

புறவழிச்சாலைகள்

சென்னையில் வடகிழக்கு பருவ மழையின்போது ஏற்பட்ட பாதிப்புகளை போக்க, அரசு மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக தற்போது சென்னை சாலைகள் எத்தகைய இயற்கை பேரிடர்களையும் தாங்கக்கூடிய அளவிற்கு கட்டமைப்புப் பெற்றதாக மாறியுள்ளது. இத்தகைய வெற்றிக்கு, சாதனைக்கு அடிப்படைக் காரணம், துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பும், தொடர்ச்சியான ஆய்வுகளும்தான்.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக, நிலுவையில் உள்ள சாலை மற்றும் பாலப் பணிகளை முடித்து, மக்களின் இன்னல்களைப் போக்க வேண்டும். எனவே, ஆய்வுக்கூட்டத்தில் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், விரைந்து செயல்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட காலக்கட்டத்திற்குள் அனைத்துப் பணிகளையும் விரைவில் முடிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.

மேலும், விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பில் உள்ள பாலங்கள் மற்றும் புறவழிச்சாலை பணிகளை விரைந்து செயல்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் திட்டமிடுமாறும், அதற்கேற்ப செயல்படுமாறும் உங்கள் அனைவரையும் நான் மீண்டும், மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் பேசினார்.

கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story