காரைக்குடி-மேலூர் இடையே ரூ.660 கோடியில் 4 வழிச்சாலை அமைக்கும் பணி


காரைக்குடி-மேலூர் இடையே ரூ.660 கோடியில் 4 வழிச்சாலை அமைக்கும் பணி
x

காரைக்குடி-மேலூர் இடையே ரூ. 660 கோடியில் 4 வழிச்சாலை அமைக்கும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி-மேலூர் இடையே ரூ. 660 கோடியில் 4 வழிச்சாலை அமைக்கும் பணியை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

4 வழிச்சாலை

காரைக்குடி-மேலூர் இடையேயான 4 வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. காட்டம்பூர், திருப்பத்தூர் சந்திப்பு சாலை, கொளிஞ்சிப்பட்டி, பட்டமங்கலம் சாலை, கும்மங்குடி, தென்கரை சந்திப்பு சாலை, பிள்ளையார்பட்டி, குன்றக்குடி ஆகிய இடங்களில் நடைபெறும் பணிகளை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதன் பின் கலெக்டர் கூறியதாவது;- தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் மூலம் மேலூர்-காரைக்குடி வரை 45.85 கி.மீ. நீளமுள்ள சாலை அமைக்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் 13.52 கி.மீ. நீளம் சாலை அமைக்கும் பணியும், சிவகங்கை மாவட்டத்தில் நயினார்பட்டி முதல் மானகிரி சுக்கானேந்தல் வரை 32.33 கி.மீ. சாலை ரூ.659.03 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது.

பாலங்கள்

மேலும், சிறு பாலங்கள், பெரிய பாலங்கள் 9, மேம்பாலம் 1 ஆகியவை அமைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் 29 கி.மீ. நீளத்திற்கு சாலை சுத்தப்படுத்தும் பணி நிறைவு பெற்றுள்ளது. 16.7 கி.மீ. தூரத்திற்கு முதற்கட்ட மண் பரப்பும் பணியும், 13.3 கி.மீ. நீளத்திற்கு 2-ம் கட்ட மேல்மண் பரப்பும் பணியும், 10.7 கி.மீ. நீளத்திற்கு முதற்கட்ட ஜல்லி கற்கள் பரப்பும் பணியும், 8.5 கி.மீ. நீளத்திற்கு இறுதிக்கட்ட ஜல்லி கற்கள் பரப்பும் பணியில் முடிவுற்றுள்ளது. 7 கி.மீ. நீளத்திற்கு தார் சாலை போடப்பட்டுள்ளது. மொத்தமாக 24 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

சாலை அமைக்கும் பணியில் உள்ள இடர்பாடுகளை விரைந்து களைந்து, நில எடுப்பு பணியில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு உரிய இழப்பீட்டு தொகையினை விரைந்து வழங்குதல். கண்மாய்கள், குளங்கள், ஓடைகள் குறுக்கிடும் இடங்களில் மழைக்காலத்திற்கு முன்பாக விரைந்து பணிகளை நிறைவு செய்யவேண்டும்.

விரைந்து முடிக்க

மேலும், மின்இணைப்பு, குடிநீர் குழாய், தொலைபேசி இணைப்பு செல்லும் பாதைகள் குறித்து துறை அலுவலர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து சீர் செய்திடவும் வழக்கமான போக்குவரத்திற்கு இடையூறு இன்றியும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணியினை விரைந்து முடிக்கவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது தேசிய நெடுஞ்சாலை துறை மதுரை மண்டல திட்ட இயக்குனர் நாகராஜன் மற்றும் துணை அலுவலர்கள் உடனிருந்தனர்.



Next Story