உடுமலை மத்திய பஸ் நிலையம் அருகே தாறுமாறாக சாலையைக்க டக்கும் பொதுமக்களால் வாகன ஓட்டிகள் அவதி
உடுமலை மத்திய பஸ் நிலையம் அருகே தாறுமாறாக சாலையைக்க டக்கும் பொதுமக்களால் வாகன ஓட்டிகள் அவதிப்படுவதுடன் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
பொதுப் போக்குவரத்து
கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உடுமலை மத்திய பஸ் நிலையம் அமைந்துள்ளது. தாலுகா தலைநகரமான உடுமலைக்கு சுற்றுவட்டார கிராமங்களைச்சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பல்வேறு பணிகளுக்காக தினசரி வந்து செல்கின்றனர்.
பொதுப் போக்குவரத்தான பஸ்கள் மூலம் வரும் பொதுமக்கள் உடுமலை பஸ் நிலையத்தில் இறங்கி தேசிய நெடுஞ்சாலையைக் கடந்தால் தான் பெரும்பாலான வணிக நிறுவனங்களுக்கோ, தாலுகா அலுவலகம், சந்தை, அரசு ஆஸ்பத்திரி உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கோ செல்ல முடியும் என்ற நிலை உள்ளது. இந்த நிலையில் மையத்தடுப்புகளுக்கு இடையில் நுழைந்து தாறுமாறாக சாலையைக் கடக்கும் பொதுமக்களால் வாகன ஓட்டிகள் அவதிப்படும் நிலை உள்ளது.
5 வாயில்கள்
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
உடுமலை நகருக்கு வெளியே செல்லும் வகையில் பைபாஸ் சாலை இல்லாத நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் தினசரி ஏராளமான கனரக வாகனங்கள் செல்கின்றன. இதனால் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் கொண்ட பகுதியாக உடுமலை பஸ் நிலையம் பகுதி உள்ளது. இந்த நிலையில் உடுமலை பஸ் நிலையத்தில் 5 வாயில்கள் வழியாக வெளியேறும் மக்கள் ஆங்காங்கே சாலையைக் கடக்க முயற்சி செய்கிறார்கள்.
இதனால் திடீர் திடீரென்று சாலையின் குறுக்கே வருபவர்கள் மீது மோதாமல் தவிர்க்க வாகன ஓட்டிகள் தடுமாறும் நிலை ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்கும் விதமாக மையத்தடுப்புகள் அமைக்கப்பட்டு ஒரே இடத்தில் மக்கள் சாலையைக்கடக்க வழி செய்யப்பட்டது. ஆனால் மையத்தடுப்புகளை ஆங்காங்கே அகற்றி 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்கள் சாலையைக்கடக்கிறார்கள். ஒரு சிலர் மோட்டார்சைக்கிள் ஸ்கூட்டர், சைக்கிள் போன்ற வாகனங்களில் மையத்தடுப்புகளின் இடைவெளியில் நுழைந்து வெளியேறுகின்றனர்.
ஆக்கிரமிப்புகள்
சாலை ஓரங்களில் அதிக அளவில் ஆக்கிரமிப்புகள் மற்றும் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் குறுகிய சாலையில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை உள்ளது. மேலும் சாலையின் நடுவில் மையத்தடுப்புகளுக்கு அருகில் சாலையைக்கடப்பதற்காக கூட்டம் கூட்டமாக காத்திருக்கும் மக்கள் மேல் மோதாமல் செல்வது வாகன ஓட்டிகளுக்கு சவாலான விஷயமாக உள்ளது. அத்துடன் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் சாலையைக்கடக்க முடியாமல் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது.
இந்த பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் பஸ் நிலையம் அருகே குறிப்பிட்ட இடத்தில் பாதசாரிகள் கடந்து செல்லும் வகையில் சிக்னலுடன் கூடிய பாதசாரிகள் சாலையைக்கடக்கும் இடம் (ஸீப்ரா கிராசிங்) அமைக்க வேண்டும். மற்ற இடங்களில் உயரமான தடுப்புகள் அமைத்து தாறுமாறாக சாலையைக் கடப்பதை தடை செய்ய வேண்டும். சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன் இந்த பகுதியில் தாறுமாறாக கார்களை நிறுத்துவதைத்தடுக்க வேண்டும். இதே பகுதியில் ரூ.1½கோடி செலவில் அமைக்கப்பட்ட லிப்டுடன் கூடிய நடை மேம்பாலத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு சமூக ஆர்வலர்கள் கூறினர்.