நாகை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம்


நாகை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம்
x
தினத்தந்தி 2 Dec 2022 12:45 AM IST (Updated: 2 Dec 2022 12:45 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் அருகே வாய்க்கால் பாலத்தில் விரிசல் ஏற்பட்டு, நாகை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

திருவாரூர்

திருவாரூர் அருகே வாய்க்கால் பாலத்தில் விரிசல் ஏற்பட்டு, நாகை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

தேசிய நெடுஞ்சாலை

தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற கடந்த 2010-ம் ஆண்டு திட்டமிடப்பட்டது. வர்த்தகர்கள் எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 2014-ம் ஆண்டு தஞ்சை-நாகை சாலையை இருவழிச் சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கின.

தஞ்சை-நாகை சாலை விரிவாக்க திட்டத்தினால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சாலையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவில்லை என்பது பொதுமக்களின் வேதனை. சாலை நெடுகிலும் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் இருந்து வருகிறது.

பாசன வாய்க்கால் பாலம்

இதில் திருவாரூரில் இருந்து மாவட்ட எல்லையான ஆண்டிப்பாளையம் வரையிலான சாலை மிகவும் சேதம் அடைந்து காணப்படுகிறது. இந்த சாலை வழியாக வாகனங்கள் செல்வது மிகுந்த சிரமமாக இருந்து வருகிறது. திருவாரூர் அருகே சீனுவாசபுரம் என்ற இடத்தில் உள்ள ஓடம்போக்கி ஆற்றில் இருந்து அலிவலம் பாசன வாய்க்கால் பிரிகிறது.

இந்த வாய்க்கால் நாகை பகுதிக்கு செல்லும் பிரதான சாலையை கடந்து செல்கிறது. தேசிய நெடுஞ்சாலை என்பதால் இங்கு எந்த நேரமும் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் பாசன வாய்க்காலில் உள்ள பாலம் சேதம் அடைந்து விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த விரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வதுடன், பிரதான சாலையிலும் விரிசல் ஏற்பட்டு வாய்க்காலில் சற்று உள் வாங்கி காணப்படுகிறது.

எச்சரிக்கை பேனர்

இதனையடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அந்த பகுதியை நேரில் பார்வையிட்டு, சேதம் அடைந்த பாலத்தின் அருகே இரும்பு தடுப்புகளை வைத்து 'பாலம் வலுவிழந்து உள்ளது, வாகனங்கள் மெதுவாக செல்லவும்' என்ற எச்சரிக்கை பேனரை வைத்துள்ளனர். ஏற்கனவே ஒரு வழிப்பாதையாக உள்ள நிலையில் சேதம் அடைந்த பாலத்துக்காக தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் ்சிரமப்பட்டு வருகிறார்கள்.

மேலும் அங்கு போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டு வருகிறது. இந்த பாலம் இடிந்து விழும் அபாயம் இருப்பதால், நாகை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் எந்நேரமும் போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம் இருப்பதாக அச்சம் தெரிவித்துள்ள பொதுமக்கள், பாலத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.

துண்டிக்கப்படும்

இதுகுறித்து திருவாரூர் ஆண்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த சங்கர் கூறியதாவது:-

தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலை என்பது மிகுந்த பழுதடைந்து உள்ளது. இதில் குறிப்பாக திருவாரூரில் இருந்து கிடாரங்கொண்டான், அடியக்கமங்கலம், ஆண்டிபாளையம் வரையிலான சாலை மிகவும் மோசமாக உள்ளது. ஏற்கனவே இந்த சாலை பல்வேறு உயிர்களை பலி வாங்கி உள்ளது. எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும். இதுதொடர்பாக மறியல் போராட்டமும் நடைபெற்று உள்ளது.

அலிவலம் வாய்கால் பாலத்திலும் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் அபாயம் உள்ளதால் நாகை, வேளாங்கண்ணி, நாகூர் மார்க்கங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்படும் நிலை உள்ளது. இதை கருத்தில் கொண்டு உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்ெகாள்ள வேண்டும்.

விரைவான நடவடிக்கை

திருவாரூர் அடியக்கமங்கலத்தை சேர்ந்த டிரைவர் சுரேஷ்:-

திருவாரூரில் இருந்து நாகை, காரைக்கால், வேளாங்கண்ணி செல்வதற்கான பிரதான சாலை என்பதால் எந்த நேரமும் போக்குவரத்து அதிகமாக இருக்கும். கடந்த 12 ஆண்டுகளாக திருவாரூர்-நாகை சாலை பராமரிக்கப்படவில்லை. அலிவலம் பகுதிக்கு பாசன வசதி தரும் அலிவலம் வாய்க்கால் தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் இடத்தில் உள்ள பாலத்தில் விரிசல் ஏற்பட்டு அந்த பாலமும் இடிந்து விழும் நிலையில் இருக்கிறது. மோசமான சாலை, இடிந்து விழும் நிலையில் பாலம் என இந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு விடுமோ? என்ற அச்சம் உள்ளது. எனவே விரைவான நடவடிக்கை தேவை என்றார்.


Next Story