சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?
உடுமலையில் இருந்து கண்ணம்மநாயக்கனூர் கிராமத்துக்கு செல்வதற்கு பழனியாண்டாநகர், ஜீவாநகர், ராயல்லட்சுமி நகர் வழியாக சாலை அமைக்கப்பட்டு உள்ளது. அதன் வழியாக பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பொதுமக்களும் சென்று வருகின்றனர். விவசாயிகள் சாகுபடிக்கு தேவையான இடுபொருட்களை எடுத்துச் செல்வதற்கும் விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருவதற்கும் இந்த சாலை பிரதானமாகும். இதன் மூலமாக குறுகிய நேரத்தில் குறைவான எரிபொருள் செலவில் உடுமலை நகரத்தை அடைய இயலும். தொடர் போக்குவரத்து உள்ள இந்த சாலையில் முறையாக பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவதில்லை. இதனால் ஜீவாநகர் தொடக்கத்தில் இருந்து ராயல்லட்சுமி நகர் வரை உள்ள பகுதி முழுவதுமாக சேதம் அடைந்து உள்ளது. உடுமலை பி.ஏ.பி. கால்வாய் முதல் கண்ணமநாயக்கனூர் கிராமம் வரை உள்ள பகுதி ஆங்காங்கே சேதம் அடைந்து உள்ளது. இதனால் வாகனங்கள் ஆங்காங்கே பழுதாகி நின்று விடுவதால் பொதுமக்கள் விவசாயிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். குறிப்பாக வளைவு பகுதியில் சேதம் அடைந்துள்ள சாலையால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். இது குறித்து தகவல் தெரிவித்தும் சம்பந்தப்பட்ட நிர்வாகம் சாலையை சீரமைக்க முன்வரவில்லை. எனவே உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளை கடந்து கண்ணமநாயக்கனூர் கிராமத்திற்கு செல்லும் சேதம் அடைந்த சாலையை சீரமைக்க முன்வர வேண்டும். அதன் முதல் கட்டமாக சேதம் அடைந்த பகுதியில் மண்ணைக்கொட்டி சமன்படுத்த சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.