பாதை ஆக்கிரமிப்பு: ஆலங்குடி-பட்டுக்கோட்டை நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியல்
பாதை ஆக்கிரமிக்கப்பட்டதால் ஆலங்குடி-பட்டுக்கோட்டை நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
வடகாடு அருகேயுள்ள மாங்காடு ஊராட்சி வாணியர் தெருவில் 15 குடும்பங்கள் வசித்து வரும் பகுதிக்கு செல்லும் பாதையை தனிநபர் 75 அடி நீளத்திற்கான பாதையை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், இதுகுறித்து கேட்டபோது இருதரப்பிற்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த பாதை சம்பந்தமாக வருவாய் துறையினரிடம் புகார் மனு அளித்து இருந்ததாகவும் ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த 15 குடும்பங்களை சேர்ந்த நபர்கள் மாங்காடு வாணியர் தெரு பிரிவு ஆர்ச் பஸ் நிறுத்தம் அருகே ஆலங்குடி- பட்டுக்கோட்டை நெடுஞ்சாலையில் திடீரென அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மாங்காடு கிராம நிர்வாக அலுவலர் இளையராஜா மற்றும் வடகாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.