சாலையோரங்களில் நடத்தப்படும் ஆஸ்பத்திரிகள் பாதுகாப்பானவை தானா
மடத்துக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் நடத்தப்பட்டு வரும் ஆஸ்பத்திரிகள் பாதுகாப்பானவை தானா என்பது குறித்து சுகாதாரத்துறையினர் ஆய்வு நடத்த வேண்டியது அவசியமாகும்.
மடத்துக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் நடத்தப்பட்டு வரும் ஆஸ்பத்திரிகள் பாதுகாப்பானவை தானா என்பது குறித்து சுகாதாரத்துறையினர் ஆய்வு நடத்த வேண்டியது அவசியமாகும்.
ஆயுர்வேதம்
பூமியில் உருவான ஒவ்வொரு இலையும், ஒவ்வொரு வேரும், ஒவ்வொரு மரப்பட்டையும் மருத்துவ குணம் கொண்டது. அவற்றை அடையாளம் கண்டு பயன்படுத்தும் மருத்துவமுறை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே நமது தேசத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. அதனை ஆயுர்வேதம் என்று அடையாளப்படுத்துவதுடன், கடவுள் மனிதனுக்கு கற்பித்த வைத்திய முறை என்று பெருமையாக அடையாளப்படுத்துவார்கள்.
முறையான பயிற்சியற்றவர்களால் ஆயுர்வேதம் கையாளப்பட்டால் அது ஆபத்தான விளைவுகளை உருவாக்கக்கூடும்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
மடத்துக்குளம், குமரலிங்கம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் திடீர் ஆயுர்வேத ஆஸ்பத்திரிகள் உருவாகியுள்ளன. இந்த ஆஸ்பத்திரிகளில் புற்று நோய், குழந்தையின்மை உள்ளிட்ட அனைத்து விதமான நோய்களுக்கும் வைத்தியம் பார்க்கிறார்கள். பெரும்பாலும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களே அங்கு வைத்தியம் பார்க்கிறார்கள். அவர்கள் முறையாக பயிற்சி மற்றும் அங்கீகாரம் பெற்றவர்களா? என்பது தெரியவில்லை.
பக்க விளைவுகள்
ஆயுர்வேதத்தைப் பொறுத்தவரை பாதரசம், ரத்தினங்கள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி மருந்துகள் தயாரிப்பதாக கூறப்படுவதுண்டு. இவ்வாறு தயாரிக்கப்படும் மருந்துகள் முறையான பயிற்சியில்லாதவர்களால் நோயாளிக்கு வழங்கப்பட்டால் அதன் பக்க விளைவுகள் அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கப்படுகிறது. ஒருசில இடங்களில் ஆயுர்வேதம் என்ற பெயரில் ரசாயனங்களைப் பயன்படுத்தி மருந்துகள் தயாரிப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
அவ்வாறு தயாரிக்கப்படும் மருந்துகளை உட்கொள்ளும் நோயாளிகளுக்கு உடனடியாக நோய் தீர்ந்ததாகத் தோன்றினாலும் அதன் பக்க விளைவுகளால் பலவிதமான பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
ஆய்வு நடத்த வேண்டும்
எனவே இவ்வாறு சாலையோரங்களில் சுகாதாரமற்ற சூழலில் செயல்படும் ஆயுர்வேத ஆஸ்பத்திரிகளில் சுகாதாரத்துறையினர் ஆய்வு நடத்த வேண்டும். அங்கு வைத்தியம் பார்க்கும் டாக்டரின் தகுதி, மருந்துகளின் தரம் போன்றவற்றை ஆய்வு செய்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
இ்வ்வாறு அவர்கள் கூறினர்.