மூடப்படாத சாலையோர குழிகளால் வாகன ஓட்டிகள் அவதி
வெள்ளகோவில் காடையூரான்வலசு சாலையின் வழியாக குடிநீர் குழாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழிகள் ஒருவார காலமாக மூடப்படாமல் அப்படியே இருந்து வருகிறது. வெள்ளகோவில் பகுதி காடையூரான்வலசு ஊருக்குள் இருந்து திருச்சி-கோவை நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இதில் திருச்சி-கோவை நெடுஞ்சாலைக்கு செல்லும் வீதி, ஸ்ரீரங்கநாயகி கவுண்டன் வலசு செல்லும் வீதி மற்றும் காடையூரான்வலசு ஊருக்கு செல்லும் வீதி என 3 வீதிகளும் இணையும் சந்திப்பு உள்ளது.
இந்த இடத்தில் ஏற்கனவே சாலை மோசமான நிலையில் இருந்தது. நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையினால் தெருக்கள் அனைத்தும் மிகவும் மோசமாகி உள்ளது. இந்த சாலையின் அருகே ஒரு வாரத்திற்கு முன்பு குடிநீர் குழாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாமல் அப்படியே இருந்து வருகிறது. எனவே இவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகள் அனைவரும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். எனவே உடனடியாக குடிநீர் குழாய்க்கு தோண்டப்பட்ட குழிகளை மூடவும் சேதமடைந்த சாலையை சீரமைக்கவும் காடையூரான்வலசு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வெள்ளகோவில் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.