புஞ்சைபுளியம்பட்டி அருகே நல்ல தண்ணீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
புஞ்சைபுளியம்பட்டி அருகே நல்ல தண்ணீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டி அருகே நல்ல தண்ணீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
உப்பு தண்ணீர்
புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள நல்லூர் ஊராட்சி ஜெ.கே நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு வசிக்கும் பொதுமக்கள் அருகில் உள்ள கனகரசம்பாளையம், கலைஞர் நகர் பகுதிக்கு சென்று தண்ணீர் பிடித்து வந்தனர். இந்தநிலையில் ஜெ.கே நகருக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி புதியதாக கட்டப்பட்டது.
இந்த தொட்டியில் நல்ல தண்ணீருக்கு பதிலாக உப்பு தண்ணீரை நிரப்பியதாக தெரிகிறது. மேலும் தொட்டியில் இருந்து தண்ணீரை வினியோகம் செய்ய குழாய் அமைக்கும் பணிகள் தொடங்கியது.
சாலை மறியல்
இந்தநிலையில் ஜெ.கே.நகர் பகுதி மக்கள் குழாய் அமைக்கும் இடத்துக்கு திரண்டு வந்து உப்பு தண்ணீரை வினியோகம் செய்யக்கூடாது என்று குழாய் அமைக்கும் பணிகளை தடுத்தார்கள்.
மேலும் தொட்டியில் நல்ல தண்ணீரை நிரப்பி, குழாய் வழியாக வினியோகிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, காலிக்குடங்களுடன் புதுப்பாளையம் பிரிவில் புளியம்பட்டி-பவானிசாகர் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை
சாலை மறியல் பற்றி தகவல் கிடைத்ததும், புஞ்சைபுளியம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பிரபாகரன், பவானிசாகர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மைதிலி, பாவேசு (கிராம ஊராட்சி), பவானிசாகர் ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் தலைவர் வி.ஏ.பழனிச்சாமி, நல்லூர் ஊராட்சி தலைவர் மூர்த்தி ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இந்த பேச்சுவார்த்தையில், 10 நாட்களில் பொன்னம்பாளையத்தில் உள்ள கீழ்மட்ட தொட்டியில் இருந்து புதியதாக கட்டப்பட்ட மேல்நிலை தொட்டிக்கு குழாய் அமைத்து நல்ல தண்ணீர் வினியோகம் செய்யப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றார்கள். இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.