சாலைமறியல் செய்ய முயன்ற பெண்கள்


சாலைமறியல் செய்ய முயன்ற பெண்கள்
x
திருப்பூர்


மொடக்குப்பட்டி ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டால் ஆத்திரம் அடைந்த பெண்கள் சாலை மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

குடிநீர் பற்றாக்குறை

உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி அணை கட்டப்பட்டு உள்ளது. இந்த அணையின் மூலமாக பி.ஏ.பி. பாசன திட்டத்தின் கீழ் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள நிலங்கள் பாசன பெற்று வருகிறது.

அத்துடன் தளி கால்வாயை ஆதாரமாகக் கொண்டு உடுமலை, கணக்கம்பாளையம், பூலாங்கிணர், குடிமங்கலம், மடத்துக்குளம் உள்ளிட்ட கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் மூலமாக சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பயன் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் வெப்பத்தின் தாக்குதல் காரணமாக கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை தலை தூக்கி உள்ளது.

குடிநீர் குழாயில் ஏற்படுகின்ற உடைப்புகளை சரியான தருணத்தில் சீரமைத்து குடிநீரை சீரான முறையில் வழங்காததே பற்றாக்குறைக்கு காரணமாகும். அதிகாரிகள் அலட்சியம் காரணமாக அடிப்படை அத்தியாவசிய தேவையான குடிநீரை பெறுவதற்கு பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலையில் இறங்கி போராட வேண்டிய நிலை உள்ளது.

சாலை மறியல் செய்ய முயற்சி

அந்த வகையில் உடுமலையை அடுத்த மொடக்குப்பட்டி ஊராட்சியில் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருவதாக தெரிகிறது. இதனால் ஆவேசம் அடைந்த பெண்கள் நேற்று காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட முயற்சித்தனர். இது குறித்து தகவல் அறிந்த தளி போலீசார் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், ஊராட்சி நிர்வாகம் போராட்டத்தில் ஈடுபட வந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது.

அப்போது குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு சீரான குடிநீர் வழங்க கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதற்கு பதில் அளித்த அதிகாரிகள் சீரான முறையில் குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Next Story