பொதுமக்கள் சாலை மறியல்


பொதுமக்கள் சாலை மறியல்
x
திருப்பூர்


திருப்பூர் மாநகராட்சி 25-வது வார்டில் சாலையை சீரமைக்கக்கோரி அ.தி.மு.க. கவுன்சிலர், பொதுமக்களுடன் இணைந்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குண்டு குழி சாலை

திருப்பூர் மாநகராட்சி 25-வது வார்டுக்கு உட்பட்ட சோளிபாளையம் பிரதான சாலையில் பொதிகை நகரில் குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகிறார்கள். இதைத்தொடர்ந்து நேற்று மதியம் 1½ மணி அளவில் அந்த வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் தங்கராஜ், சாலையில் வடிகால் மற்றும் தார் ரோடு அமைக்கும் பணியை மேற்கொள்ளும் நெடுஞ்சாலைத்துறையினரிடம் முறையிட்டார்.

அங்கு வந்த சூப்பர்வைசரிடம், சாலையில் உள்ள 2 அடி ஆழ குழியால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகிறார்கள். எனவே குழியை கான்கிரீட் கலவை கொண்டு மூடிக்கொடுக்குமாறு வேண்டுகோள் வைத்தார். இதற்கு அந்த சூப்பர்வைசர் மண் மட்டும் கொட்டப்படும் என்றும், விபத்து நடந்தால் நான் என்ன செய்வது என்று அலட்சியமாக கவுன்சிலரிடம் கூறியதாக தெரிகிறது.

கவுன்சிலர் தலைமையில் மறியல்

இதைத்தொடர்ந்து கவுன்சிலர் தங்கராஜ், அப்பகுதியை சேர்ந்த மக்களுடன் சேர்ந்து நெடுஞ்சாலைத்துறையினரை கண்டித்து சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டார்.இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவம் பற்றி அறிந்ததும் 15.வேலம்பாளையம் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். நெடுஞ்சாலைத்துறையினரிடம் பேசி, குழியை கான்கிரீட் தளம் கொண்டு மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து மறியலை கைவிட்டனர். இதனால் 1 மணி நேரம் அந்த ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையை சீரமைக்கக்கோரி கவுன்சிலர் தலைமையில் மறியல் நடந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story