டாக்டர் அன்புமணி ராமதாஸ் கைதை கண்டித்து பா.ம.க.வினர் சாலை மறியல்-ஆர்ப்பாட்டம்


டாக்டர் அன்புமணி ராமதாஸ் கைதை கண்டித்து பா.ம.க.வினர் சாலை மறியல்-ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 July 2023 2:53 AM IST (Updated: 29 July 2023 3:05 AM IST)
t-max-icont-min-icon

நெய்வேலியில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சேலம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பா.ம.க.வினர் சாலை மறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்

எடப்பாடி:

டாக்டர் அன்புமணி ராமதாஸ்

கடலூர் மாவட்டம், நெய்வேலி பகுதியில் என்.எல்.சி. நிறுவன விரிவாக்க பணிக்காக, நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்படுவதாக கோரி, இப்பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று என்.எல்.சி. நுழைவுவாயில் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கைதுக்கு கண்டனம் தெரிவித்து மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பா.ம.க.வினர் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக எடப்பாடி நகர செயலாளர் கே.பி.எம். சண்முகம் தலைமையில் சுமார் 80-க்கும் மேற்பட்டவர்கள், எடப்பாடி பஸ் நிலைய நுழைவுவாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டாக்டர் அன்புமணி ராமதாசை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும், தமிழக அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பிய பா.ம.க.வினர், தொடர்ந்து எடப்பாடி பஸ் நிலைய நுழைவுவாயில் முன்பு அமர்ந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட பா.ம.க.வினரை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சங்ககிரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தலைமையிலான போலீசார் கைது செய்து தனியார் அரங்கில் காவலில் வைத்தனர்.

இதேபோல் கொங்கணாபுரம் பகுதியில் மாவட்டசெயலாளர் முத்துசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய செயலாளர்கள் நடராஜன் மற்றும் செல்வம் உள்பட பா.ம.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட பா.ம.க.வினரை கொங்கணாபுரம் போலீசார் கைது செய்தனர்.

பூசாரிப்பட்டி

இதேகோரிக்கையை வலியுறுத்தி ஓமலூரை அடுத்த பூசாரிப்பட்டி பூ மார்க்கெட் அருகே தர்மபுரி சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பா.ம.க. மாவட்ட தலைவர் டாக்டர் மாணிக்கம் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட அமைப்பு தலைவர் குமார், மாவட்ட தொழிற்சங்க தலைவர் பழனிசாமி, மாவட்ட துணைச்செயலாளர் குமார், மாநில வன்னியர் சங்க செயற்குழு உறுப்பினர் குமார், ஒன்றிய செயலாளர்கள் ராஜாமணி, செல்வம், மாதேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் ஓமலூர் நகர பா.ம.க. செயலாளர் சாய்சுஜன் தலைமையில் ஓமலூர் பஸ் நிலையம் அண்ணா சிலை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஓமலூர் தெற்கு ஒன்றிய தலைவர் ராஜேந்திரன், வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட பொருளாளர் பரமேஸ்வரி, இளம் பெண்கள் தலைவி பரணிலதா, அன்புமணி தங்கைகள் படை செயலாளர் பானுபிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் முத்துநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பா.ம.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாழப்பாடி

இதேபோல் வாழப்பாடி பஸ் நிலையம் பகுதியில் ஒருங்கிணைந்த வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் குணசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. உழவர் பேரியக்க மாவட்ட செயலாளர் முருகன், பசுமை தாயகம் மாநில துணைச் செயலாளர் வெங்கடாசலம், வாழப்பாடி ஒன்றிய செயலளர்கள் பச்சமுத்து, செந்தில்குமார், ஆனந்தபாபு, நகரசெயலாளர் பொன்னுதுரை, மாவட்ட அமைப்பு தலைவர் ராஜமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

தாரமங்கலம்

தாரமங்கலம் ஒன்றிய, நகர பாட்டாளி மக்கள் கட்சியினர் தாரமங்கலம் அண்ணா சிலையில் இருந்து ஊர்வலமாக பஸ் நிலையத்துக்கு சென்றனர். பின்னர் பஸ் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 80 பேர் கைது செய்யப்பட்டனர்.

மகுடஞ்சாவடி

மகுடஞ்சாவடி பஸ் நிறுத்தம் அருகே பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் முத்துசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், மாவட்ட பசுமை தாயக அமைப்பாளர் பச்சமுத்து, ஒன்றிய செயலாளர்கள் பாஸ்கர், முத்துகிருஷ்ணன் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இடங்கணசாலை நகராட்சி பஸ் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் அண்ணாதுரை, தெற்கு மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் மாதேஸ்வரன், இடங்கணசாலை நகர தலைவர் தன்ராஜ், துணைத்தலைவர் பூபதி, செயலாளர் மணி உள்பட பா.ம.க. நிர்வாகிகள் கலந்து கொண்டு டாக்டர் அன்புமணி ராமதாசை விடுதலை செய்யக்கோரி கோஷம் எழுப்பினர்.

மணிவிழுந்தான்

தலைவாசலை அடுத்த மணிவிழுந்தானில் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பா.ம.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன்படி, சேலம் கிழக்கு மாவட்ட பா.ம.க. இளைஞரணி செயலாளர் திருமால், மாநில பொதுக்குழு உறுப்பினர் சுந்தரம், தலைவாசல் மேற்கு ஒன்றிய செயலாளர் குமரேசன் ஆகியோர் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 52 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேவூர்

தேவூர் அருகே அரசிராமணி மூலப்பாதை 4 ரோட்டில் பா.ம.க.வினர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கைதை கண்டித்து சாைலமறியலில் ஈடுபட்டனர். இதற்கு சங்ககிரி மேற்கு ஒன்றிய செயலாளர் பூபதி தலைமை தாங்கினார். சேலம் தெற்கு மாவட்ட துணை தலைவர்கள் லட்சுமணன், மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் அரசிராமணி பேரூர் செயலாளர் சேட்டு, பேரூர் தலைவர் லட்சுமணன் மற்றும் சரவணன், தாசசேகரன், ராமன், சங்கர், இளைஞரணி பிரபு, கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சங்ககிரி

சங்ககிரி பழைய பஸ் நிலையம் அருகே நகர செயலாளர் வி.டி.அய்யப்பன் தலைமையில் நடைபெற்ற பா.ம.க. ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட துணை தலைவர் பழனிமுத்து, துணை செயலாளர் சத்ரிய சாமிநாதன், செயற்குழு உறுப்பினர் சுப்ரமணி, ஒன்றிய தலைவர் வடிவேல், செயலாளர் பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் கெங்கவல்லியில் எம்.ஜி.ஆர். சிலை முன்பு கட்சியின் பேரூர் செயலாளர் பூபதி தலைமையில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சேலம் வடக்கு மாவட்ட பா.ம.க. துணை செயலாளர் லட்சுமணன் தலைமையில் அந்த கட்சியினர் இரும்பாலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து இரும்பாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாரதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர். மேலும் சாலை மறியலில் ஈடுபட்ட 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story